கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை சரிந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் ஏகப்பட்ட நஷ்டத்தை பெற்ற நிலையில் இந்த வாரமாவது பங்குச்சந்தை மீண்டும் உயர்வை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிந்து கொண்டே வரும் நிலையில், சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 768 புள்ளிகள் குறைந்து 75 ஆயிரத்து 417 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 249 புள்ளிகள் குறைந்து 22837 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பிரிட்டானியா, ஐசிஐசி வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளது. ஹீரோ மோட்டார், மாருதி, ஆசியன் பெயிண்ட், ஐடிசி, அப்போலோ ஹாஸ்பிடல், கோடக் மகேந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டான், சன் பார்மா, இன்போசிஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
பங்குச்சந்தை நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் தான் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும், எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.