அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை காலை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து, நிதிச் சந்தைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 90-ஐ எட்டிய நிலையில், இன்று காலை மேலும் சரிந்து ரூ. 90.15 ஆகக் காணப்பட்டது. இது, வரலாற்றில் முதல்முறையாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 90-ஐக் கடந்த நிகழ்வாகும்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ரூபாயின் மதிப்பில் இந்தத் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி, வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழலில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைவது, இறக்குமதிச் செலவுகளை அதிகரிப்பதோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிக்கலாம் என்பதால், பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் இந்த அதல பாதாள சரிவு, இந்தியப் பொருளாதாரத்தின் பல துறைகளில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலைச் சீரமைக்க, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளன.