சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனை அடுத்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் சில சாலைகளில் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள 27 சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும், குடியிருப்புகள் மற்றும் பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு அவசியமின்றி வெளியேறாமல் முடங்கி உள்ளனர் என்றும், பல இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.