பிரபல சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரமான சூப்பர்மேனின் புதிய படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள அமெரிக்க சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரங்களில் முதன்மையானவர் சூப்பர்மேன். கார்ட்டூன், காமிக்ஸ், திரைப்படம் என பல வகையிலும் சூப்பர்மேன் கதைகள் வெளியாகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக டிசி சினிமாட்டிக் யுனிவர்ஸை ஸாக் ஸ்னைடர் தொடங்கியபோது ஹென்ரி கெவிலை சூப்பர்மேனாக அறிமுகம் செய்தார். ஆனால் அவருக்கும், வார்னர் ப்ரதர்ஸுக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் பாதியில் நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து டிசி சூப்பர்ஹீரோக்கள் படங்கள் ரீபூட் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் புதிய சூப்பர்மேன் படம் உருவாகி வருகிறது. இதில் டேவிட் கோரென்ஸ்வெட் சூப்பர்மேனாக அறிமுகமாகிறார். லெக்ஸ் லூதராக நிகோலஸ் ஹால்ட் நடிக்கிறார். ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி உள்ளிட்ட பல படங்கள் ஹிட் என்பதால் இந்த சூப்பர்மேன் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்யும் விதமாக வெளியாகியுள்ளது சூப்பர்மேன் படத்தின் ட்ரெய்லர். முதல் காட்சியிலேயே அடி வாங்கி ரத்தம் சிந்த பனிப்பாலைவனத்தில் கிடக்கும் சூப்பர்மேனை, அவரது நாய் க்ரிப்டோ காப்பாற்றி கொண்டு செல்கிறது. பொதுவாக சூப்பர்மேனை தொடக்கூட முடியாது என்றே படங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில் முதல் காட்சியிலேயே சூப்பர்மேன் வீழ்ந்து கிடப்பது படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ், சினிமாட்டிக் ஷாட்ஸ் ஒரு சீரியஸ் ரக எமோஷனல் படமாக இது இருக்கும் என கருத வைக்கிறது. தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Edit by Prasanth.K