காலை எழுந்ததும் பல் துலக்குவது நமது வாய் சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியமான பழக்கம். ஆனால், பல் துலக்குவதில் நாம் காட்டும் அதே கவனம், நாம் பயன்படுத்தும் பல் துலக்கும் பிரஷ்ஷின் மீது இருப்பதில்லை. பலரும் ஒரே பிரஷ்ஷை மாதக்கணக்கில், அதன் இழைகள் தேய்ந்து போகும் வரை பயன்படுத்துகின்றனர். இது சரியானதல்ல என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பல் மருத்துவர்களின் கருத்துப்படி, ஒரு பல் துலக்கும் பிரஷ்ஷை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். பழைய பிரஷ்ஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தும்போது, அதன் இழைகள் தங்கள் வடிவத்தையும் செயல்திறனையும் இழந்துவிடும்.
தேய்ந்த இழைகளால், பற்களுக்கு இடையில் உள்ள உணவு துகள்களை முழுமையாக அகற்ற முடியாது. மேலும், இவை ஈறுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, சேதத்தையும் உண்டாக்கும். ஏனெனில், பிரஷ்ஷின் இழைகள் நேராகவும் வலுவாகவும் இருந்தால்தான் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே சிறப்பாகச் செயல்பட முடியும்.
பழைய பிரஷ்ஷில் பாக்டீரியா, ஈஸ்ட், மற்றும் பூஞ்சைக் காளான்கள் படிந்து, அவை வாய்வழி சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும்.
மேலும், பிரஷ்ஷை மூடி வைக்க கூடாது. ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா, வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதால், காற்றோட்டமான சூழலில் பிரஷ்ஷை வைப்பது சிறந்தது.