சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு தலைப்புகளில் தெரு நாய்கள் தொல்லையும் ஒன்று. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார். தெரு நாய்கள் பிரச்சனைக்கான தீர்வு மிகவும் எளிது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"தெரு நாய் பிரச்சனைக்கான தீர்வு மிகவும் எளிது. இது விஷயம் தெரிந்தவர்களுக்கும், உலக வரலாறு தெரிந்தவர்களுக்கும், சமூக சுகாதாரம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களுக்கும் புரியும்," என்று கமல்ஹாசன் கூறினார்.
தான் கூறிய கருத்தை விளக்க, கழுதையை உதாரணமாகக் கூறினார். "கழுதைகள் எங்கே காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? கழுதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. நமக்காக எவ்வளவு சுமை தாங்கியது! இப்போது கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
"எல்லா உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் காப்பாற்ற வேண்டும்," என்று அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து, சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே புதிய கோணத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.