தற்போதைய நவீன காலக்கட்டத்தில் எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. மற்றவர்களை தொடர்பு கொள்ள, செய்திகளை தெரிந்து கொள்ள, கல்வி பயன்பாடு என்ற அத்தியாவசியங்களை தாண்டி மக்கள் பலரும் அனாவசியமாக எந்நேரமும் செல்போன் மூலம் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கும் நிலையில் சமீபமாக பலரிடம் ஒரு தவறான பழக்கம் அதிகரித்து வருகிறது. அது கழிவறையில் அமர்ந்து செல்போன் பார்ப்பது. பலர் கழிவறைக்குள் சென்றால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கூட செல்போன் பார்த்தபடியே அமர்ந்திருப்பது தற்போதைய வாழ்க்கையின் ஒரு பழக்கமாகவே ஆகி வருகிறது.
ஆனால் இந்த பழக்கம் உடல் ஆரோக்கியத்தில் பல அபாயங்களை கொண்டு வரும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் செல்போனில் கவனமாக இருப்பதால் எவ்வளவு நேரம் அமர்த்திருக்கிறோம் என்பதை உணர்வதில்லை. ஆனால் கழிவறையில் அவ்வாறாக நீண்ட நேரம் கழிக்கும் தோரணையில் அமர்ந்திருப்பதால் ஆசனவாயில் பல அசௌகர்யங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இது மலச்சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அவ்வாறாக மலச்சிக்கல் ஏற்படுபவர்களுக்கு நாள்பட்ட செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய அசௌகர்யம் நேரலாம். தொடர்ந்து நீண்ட காலத்திற்கு இவ்வாறாக இந்த பழக்கத்தை தொடர்ந்தால் ஆசனவாயில் கொடுக்கப்படும் அதிக அழுத்தம் காரணமாக ரத்த நாளங்கள் வீங்கி மூலம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் மற்றொரு கோணத்தில் வீட்டில் அதிக பாக்டீரியாக்கள், கிருமிகள் பரவியிருக்கும் பகுதியாக வீட்டின் கழிப்பறையே உள்ளது. அவ்வாறான கழிப்பறைக்கு செல்லும்போது 10 முதல் 15 நிமிடங்களுக்குள் வந்த வேலையை முடித்துக் கொண்டு வெளியேறுவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் உதவும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
Edit by Prasanth.K