Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

Advertiesment
IIRSI

Prasanth K

, சனி, 5 ஜூலை 2025 (19:11 IST)

ஐஐஆர்எஸ்ஐ 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்

 

கண்விழி அறுவை சிகிச்சை & பார்வைத் திருத்த அறுவை சிகிச்சைக்கான உயர் தொழில்நுட்ப மாநாடு இது 

 

ஐஐஆர்எஸ்ஐ 2025 (IIRSI 2025) மாநாட்டில் 40 நிகழ்வுகள் நடக்க உள்ளன. கண் புரை அறுவை சிகிச்சை, கண்விழியில் லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் தொடர்பான சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் என்னென்ன என்பது குறித்து இதில் விளக்கப்படுகிறது. 

 

உலகெங்கிலுமிருந்து சுமார் 1000 கண் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இதில் கலந்துகொண்டு, அறுவை  சிகிச்சையின் செய்முறை விளக்கத்தை காண்பதுடன்,  முக்கியமான உரைகள், செயல்முறை பயிற்சிப்பட்டறைகள் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். 

 

சென்னை,  5 ஜூலை 2025: கண்விழி அறுவை சிகிச்சை மற்றும் பார்வை திருத்த அறுவை சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. கண் அறுவை சிகிச்சை தொடர்பான மாநாடு, ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் (Intraocular Implant & Refractive Society of India -(IIRSI) வருடாந்திர நிகழ்வு ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. இதனை இன்று மொரிஷியஸ் நாட்டைச்சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் திரு.அனில் குமார் பச்சூ மற்றும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான முனைவர் ஆர்த்தி கணேஷ், இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

 

ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் தலைவர் மருத்துவர்.சந்தன்ஷு மத்தூர் தலைமையேற்க, இயக்குநர் ஜெனரல் பேரா.அமர் அகர்வால், அறிவியல் கமிட்டியின் தலைவர் மருத்துவர்.மஹிபால் எஸ். சச்தேவ் ஆகிய முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 1000 கண் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆய்வாளர்கள், உலெகெங்குமிலிருந்து பல்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் உரையாற்றினர். நேரடி அறுவை சிகிச்சை காட்சிப்படுத்தல், கண்புரை அறுவை சிகிச்சை தொடர்பான செய்முறைப்பயிற்சி, கண்விழி அறுவை சிகிச்சை மற்றும் பார்வை திருத்த (மாற்று) அறுவை சிகிச்சை ஆகியவை நிகழ்த்தப்பட்டன. 

 

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஆப்தால்மிக் ப்ரிமியர் லீக் போட்டி, ஐஐஆர்எஸ்ஐ திரைப்பட விருது நிகழ்ச்சி (IFFA) ஐஐஆர்எஸ்ஐ புகைப்படப் போட்டி, கண் சிகிச்சை தொடர்பான சிக்கல் குறித்த நுட்பமான உரையாடல்கள், சிறப்புரைகள், கண் மருத்துவத்தின் அடிப்படைகள் தொடர்பான வகுப்புகள், இளம் கண் மருத்துவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் ஆகியவை இங்கு நடைபெற்றன. அதேபோல, கண் மருத்துவம் தொடர்பான பல்வேறு சிறப்புத் துறைகளுக்குப் பங்களித்த கண் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.  

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் திரு.அனில் குமார் பச்சூ அவர்கள், “மருத்துவமும் நம் அனைவருக்கும் பொதுவான மதிப்பீடுகளும் பல நாடுகளை இணைக்கும் அற்புதத்தைக் காணும் வாய்ப்பு எனக்கு இங்கு கிடைத்திருக்கிறது.  இந்தியா, மருத்துவத்தில் வெகுவாக முன்னேறியுள்ளது. எனவே, கூட்டாக இணைந்து செயல்பட பல நாடுகளுடன் ஆர்வம் காட்டுகின்றன. மேலும் இதுபோன்ற புதுமைக் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட நிகழ்வுகளில் இந்திய, சர்வதேச வல்லுநர்கள் குழுமியிருப்பதையும் அவர்கள் தமது அறிவைப் பகிர்வதையும் பார்ப்பதற்குப் பெருமையாக இருக்கிறது. கண் பாதுகாப்பு எனும் ஒற்றைக்குறிக்கோளை நோக்கிய பாதையில் எவரையும் விட்டுவிடாது, அனைவரையும் ஒன்றடக்கிய பயணமாக இது அமைந்துள்ளது” என்றார் அவர். 

 

ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் பொதுச்செயலரும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக் குழுமத்தின் தலைவருமான பேராசிரியர். அமர் அகர்வால் அவர்கள் பேசும்போது, “ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் வளர்ச்சியடைந்துவருவதைப் பார்க்கும்போது அது உள்ளபடியே பெருமிதம் தருகிறது. உலகெங்குமுள்ள முன்னணி கண் மருத்துவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.  புதுமையான அறுவை சிகிச்சைகளில் இந்தியாவின் தலைமைத்துவத்தைப் பறை சாற்றுவது மட்டும் இந்நிகழ்வின் நோக்கமல்ல; மாறாக, இதன் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் திறன்களை மென்மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையில் அறுவை சிகிச்சை சார்ந்த செய்முறைப்பயிற்சிகள், செயற்கை கண் உறுப்புகளைகொண்டு பயிற்சியளித்தல், உலகின் தலைசிறந்த வல்லுநர்களுடன் உரையாட வாய்ப்பு என்று எல்லாமே இந்த நிகழ்வில் வழங்கப்படுகிறது.  எங்களது இலக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: இங்கு வந்து செல்லும் பங்கேற்பாளர்கள், திரும்பிச் சொலும்போது கூடுதலான தன்னம்பிக்கையுடனும் கூடுதல் தகவல்களுடனும் கண் மருத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பாங்குடனும் செல்ல வேண்டும் என்பதுதான்.  இந்தக் களமானது, கண் மருத்துவர்களுக்கும் மருத்துவத்துறை வல்லுநர்களுக்கும் அறிவைப் பகிர்வதுடன் மட்டும் நில்லாது  மருத்துவத் துறையில் இந்திய அளவிலும் உலகளாவிய அளவிலும் பொருள் பொதிந்த கூட்டுறவுகளை உருவாக்குவதையும்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார். 

 

கண் மருத்துவவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கவும் உள்விழி உட்பொருத்தல் மற்றும் லேசிக் & ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சையில் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் மற்றும் நிகழாமல் தடுக்கக்கூடிய பார்வைத்திறனிழப்பு பிரச்சனைக்கான சிகிச்சைக்கு பங்களிப்பு வழங்கவும் இந்தியாவெங்கிலும் உள்ள கண் மருத்துவ நிபுணர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1982ம் ஆண்டில் IIRSI இந்தியா என்ற இந்த அமைப்பு நிறுவப்பட்டது. கண்புரை அறுவைசிகிச்சையில் சவால்மிக்க பிரச்சனைகளை கையாண்டு சமாளிப்பதில் தங்களை திறன்மிக்கவர்களாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு வளர்ந்துவரும் கண் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு கலந்துரையாடலுக்கான ஒரு மன்ற அமைப்பையும் இது வழங்குகிறது. கண் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும் IIRSI பணியாற்றிவருகிறது. 

வருடாந்திர IIRSI மாநாடு என்ற நிகழ்வு 1982ம் ஆண்டில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. கண் அறுவைசிகிச்சை மற்றும் சிகிச்சையில் சமீபத்திய உத்திகளை கண் மருத்துவ நிபுணர்களுக்கு கற்பிப்பது மீது இது சிறப்பு கவனம் செலுத்துகிறது. சிகிச்சை முறைகளை கற்றுக்கொள்ளவும் மற்றும் செய்து காட்டவும் இதில் மருத்துவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. நேரலையில் அறுவைசிகிச்சைகளின் ஒளிபரப்பு,  கற்பிக்கின்ற பேருரைகள் மற்றும் வெட் லேப் ஆகியவை இடம்பெறுகிற இம்மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்நாட்டிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கண் மருத்துவர்கள் வருகை தருகின்றனர். தாங்கள் மேற்கொண்ட அறுவைசிகிச்சைகள் பற்றிய வீடியோக்களை பலரும் அறிய காட்சிப்படுத்துகின்றனர். கண் மருத்துவம் சார்ந்த கருவிகளையும், சாதனங்களையும் தயாரிக்கும் நிறுவனங்களும் மாநாட்டு அமைவிடத்தில் அவர்களது சமீபத்திய தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!