அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஒரு அத்திப்பழத்தில் சுமார் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் இயற்கைச் சர்க்கரை, 1 கிராம் நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. மேலும், இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்புச்சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.
அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் மற்றும் நார்ச்சத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். 35 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாக பார்க்கப்படுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தமாக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கும். மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழத்தை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குகிறது.