நமது வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், ஏசி போன்ற மின்னணு சாதனங்கள் அத்தியாவசியமாகிவிட்டன. ஆனால், பாத்திரங்களை கழுவ பயன்படுத்தும் டிஷ்வாஷரை வாங்குவது குறித்து பலருக்கும் இன்னும் சந்தேகம் உள்ளது. "டிஷ்வாஷர் உண்மையிலேயே பாத்திரங்களை சுத்தமாக தேய்த்து தருமா?" என்ற கேள்வியே பலரது மனதில் எழுகிறது.
ஆரம்பத்தில், மேற்கத்திய உணவு முறைகளுக்கும் பாத்திரங்களுக்கும் மட்டுமே ஏற்ற டிஷ்வாஷர்கள் விற்பனையில் இருந்தன. ஆனால், இப்போது இந்திய பாத்திரங்கள் மற்றும் சமையல் முறைகளை கருத்தில் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்கள் கிடைக்கின்றன. இது, எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுகளைக்கூட எளிதாக நீக்கி, பாத்திரங்களை முழுமையாகச் சுத்தம் செய்கிறது.
சலவை இயந்திரத்தை போலவே, டிஷ்வாஷரும் தண்ணீரை சூடாக்கி, அதிக அழுத்தத்தில் பாத்திரங்கள் மீது பீய்ச்சி அடித்து, அவற்றை நன்கு ஊறவைக்கிறது. பின்னர், அதற்கென இருக்கும் டிடர்ஜென்ட் திரவம் அல்லது மாத்திரைகளை பயன்படுத்தி, பாத்திரங்களை நன்றாகக் கழுவி, 90% உலர்ந்த நிலையில் வெளியிடுகிறது.
இந்திய சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மாடல்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ரூ.15,000 முதல் பல்வேறு விலைகளில் டிஷ்வாஷர்கள் கிடைக்கின்றன.