இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.
மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவர் சி எஸ் கே அணியில் இணையப் பேச்சுவார்த்தை நிலவுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் சி எஸ் கே அணி ட்ரேட் மூலம் வீரர்களை வாங்குவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது. அதனால் அப்படி நடக்காது எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை விட்டு செல்லப் போவதில்லை என்றும் அந்த அணியிலேயே தொடரப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை அணிக்கு சஞ்சு வருவார் என எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிருப்தியாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.