இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.
மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவரை சிஎஸ்கே அணி வாங்கலாம் என்ற விருப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சஞ்சு தன்னை ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார். அதில் “எனக்கு ராஜஸ்தான் அணிதான் உலகமே. கேரளாவின் ஏதோ ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த எனக்கு அந்த அணிதான் மேடை அமைத்துக் கொடுத்தது. என்னை டிராவிட் சாரும் அணி நிர்வாகமும் என்னை முழுமையாக நம்பினர். அவர்களுடனான எனது பயணம் அற்புதமானது” எனக் கூறியுள்ளார். இதன் மூலமாக அவர் ராஜஸ்தான் அணியிலேயே தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ரசிகர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.