சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளராக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான். முன்னதாக ஒருநாள் போட்டியில் தோனி கேப்டனாக செயல்பட்டபோது 25வது ஓவரில் ரன் எடுக்க ஓடியபோது குறுக்கே நின்ற இதே முஸ்தபிசுரை தோனி பலமாக மோதி தள்ளிவிட்டு செல்ல அதனால் பிரச்சினை எழுந்தது. இதனால் தோனிக்கு சம்பளத்தில் 75 சதவீதமும், முஸ்தபிசுருக்கு 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது வரலாறு.
அப்படி ஒருசமயம் எதிரெதிராக இருந்தவர்கள் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஒரே குடும்பமாக இணைந்து கலக்கினார்கள். முஸ்தபிசுர் பல அவசியமான நேரங்களில் விக்கெட்டுகளை சாய்த்தார்.
தற்போது வங்கதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அதில் முஸ்தபிசுர் பங்கேற்க வேண்டியுள்ளதால் சிஎஸ்கே அணியிலிருந்து விடைபெறுகிறார். அதற்கு முன்னதாக தோனியிடம் அவர் ஆட்டோகிராப் போட்ட டீசர்ட்டை ஆசையாக பெற்றுக் கொண்டார் முஸ்தபிசுர்
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர் “எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க உதவிக்குறிப்புகளைப் பாராட்டுகிறேன், நான் அந்த விஷயங்களை நினைவில் கொள்கிறேன். விரைவில் உங்களை மீண்டும் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அவரை வழியனுப்பி வைத்து சிஎஸ்கே நிர்வாகம், வங்கத்தின் சிங்கம் மீண்டும் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.