இந்த ஆண்டு ஐபில் தொடரின் மிகவும் பரபரப்பான போட்டி நேற்று நடந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தனைக்கும் நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 112 ரன்கள்தான். நேற்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்ஷிம்ரான் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
112 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆட வந்த கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் ஒரு கட்டத்தில் பந்துகள் அதிகமாக இருந்தும் தேவைப்படும் ரன் குறைவாக இருந்தும் விக்கெட்கள் கைவசம் இல்லாததால் பஞ்சாப் அணி வெற்றி பெறவும் வாய்ப்பு உருவானது.
ஆனால் கொல்கத்தா அணி அதிரடி பேட்ஸ்மேன் ரஸ்ஸல் களத்தில் இருந்ததால் எப்படியும் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் கடைசி ஆளாக விக்கெட்டை இழக்க கொல்கத்தா அணி 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணி சார்பாக நான்கு விக்கெட்கள் வீழ்த்திய சஹால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.