இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி மிகச்சிறப்பாக விளையாடி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் ஷர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து ஆடிய இலங்கை அணியும் இந்திய அணிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பேட் செய்தது. அந்த அணியின் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவருக்குத் துணையாக குஷால் பெராரா 58 ரன்கள் சேர்த்தார். ஆனால் பரபரப்பான கடைசி ஓவரில் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில் அதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2 ரன்கள் மட்டும் எடுத்து 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் இந்திய அணி முதல் பந்திலேயே 3 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சதம் அடித்த பதும் நிசாங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.