கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து தாய் அணியான சிஎஸ்கேவுக்கு கடந்த ஆண்டு திரும்பினார் அஸ்வின். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மொத்தம் நடந்த 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி வேறு அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அணியில் தனது எதிர்காலம் என்றுதான் விளக்கம் கேட்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இதற்கிடையில் சென்னை அணிப் பற்றி அஸ்வின் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றது.
அதில் “சென்னை அணியின் வீரர் குர்ஜப்னீத் சிங் காயமடைந்த போது அவருக்குப் பதில் மாற்றுவீரராக சென்னை அணியால் வாங்கப்பட்ட டிவால்ட் பிரேவிஸ், பாதி தொடரில் அணியில் இணைய அதிக தொகை பெற்றார். எனத் தனது இணையச் சேனலில் தெரிவித்திருந்தார். ஆனால் அஸ்வினின் இந்தக் கருத்தை மறுத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் “ஐபிஎல் விதிகளைப் பின்பற்றிதான் பிரேவிஸை அணியில் எடுத்ததாகக் கூறியுள்ளது”. இதனால் அஸ்வினுக்கும் சி எஸ் கே அணிக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.