இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட சிலர் விளையாடவில்லை. அதனால் அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்கி, வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியை வொயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதே எங்கள் இலக்கு என பங்களாதேஷ் பயிற்சியாளர் மெக்டர்மோட் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “ரோஹித் ஷர்மா இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலம். அவர் போட்டியின் முடிவை மாற்றும் தன்மைக் கொண்டவர். இதுவரை இந்தியாவை நாங்கள் வொயிட்வாஷ் செய்தது இல்லை. அதனால் இப்போது எங்கள் இலக்கு அதுதான். நாங்கள் ஒருபோதும் சர்வதேச போட்டிகளை விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி, பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு ஒருநாள் போட்டிகளை தோற்று இந்திய அணி பரிதாபகரமாக தொடரை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.