இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஓமன் அணி இந்திய அணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டது. அந்த அணி 20 ஓவர்களையும் எதிர்கொண்டு நான்கு விக்கெட்களை மட்டுமே இழந்து 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மத் மிஸ்ரா 51 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர்.
இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை அவர் தன்னுடைய 26 ஆவது வயதில் 64 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.