Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதயநோய் மரணம் அதிகரிப்பது ஏன்? - அரசு நடத்திய ஆய்வும் 2 காரணங்களும்!

Advertiesment
இதயநோய் மரணம் அதிகரிப்பது ஏன்? - அரசு நடத்திய ஆய்வும் 2 காரணங்களும்!
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:53 IST)
இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணிகளை மருத்துவ உலகினர் முன்வைக்கின்றனர். `கொரோனா நோய்த் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளைத் தடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியதால் இதர நோய்களை கண்காணிக்கும் பணிகள் குறைந்துவிட்டன. இதயநோய் மரணங்கள் ஏற்படுவதற்கு இது ஒரு காரணம்' என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
 
அரசு நடத்திய ஆய்வு
 
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் பாதிப்பு என்பது 1,054 ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் சனிக்கிழமையன்று புதிதாக 22 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
அதேநேரம், கொரோனா காரணமாக பெருகி வரும் இணை நோய்களால் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குறிப்பாக, இளவயதினர் மத்தியில் இதயநோய் மரணங்கள் அதிகரித்து வருவது என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உடற்பயிற்சியினை மேற்கொள்ளும்போதும் நண்பர்களுடன் உரையாடும்போதும் திடீரென இளவயதினருக்கு ஏற்படும் மாரடைப்புகளுக்கு பல்வேறு காரணங்களை மருத்துவத்துறையினர் முன்வைக்கின்றனர்.
webdunia
கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு ஒன்றில், தொற்றா நோய்கள் (NCD) மூலம் வரக்கூடிய இறப்பு விகிதம் என்பது 63 சதவீதமாக உள்ளதாகவும் குறிப்பாக 30 முதல் 70 வயது வரையில் உள்ளவர்களில் 23 சதவிதம் பேருக்கு இதன்மூலம் இறப்பு நேருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை குறைபாட்டைப் பொறுத்தவரையில் நான்கில் ஒருவருக்கும் (25 சதவீதம்) ரத்தக் கொதிப்பு என்பது மூன்றில் ஒருவருக்கும் (33 சதவீதம்) உள்ளது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 
அதிலும், தொற்றா நோய்களால் ஏற்படும் பாதிப்பு என்பது பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. உடல்ரீதியாக இயங்காமல் இருப்பது, உணவு முறை மாற்றம் (அதிக துரித உணவு பயன்பாடு, அதிக உப்புள்ள காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது குறைந்தது) மது மற்றும் புகை, மனஅழுத்தம் ஆகியவற்றை பிரதான காரணங்களாக இந்த ஆய்வு முன்வைக்கிறது.
 
அலட்சியப்படுத்தும் 50 சதவீதம் பேர்
`` தமிழ்நாட்டில் இளம் வயதினர் மத்தியில் இதயநோய் என்பது அதிகரித்தபடியே உள்ளது. கொரோனா நேரத்தில் இதர தொற்றா நோய்களுக்கு உரிய கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இணை நோய்களில் முக்கியமானவை ரத்த அழுத்தமும் சர்க்கரை குறைபாடும்தான். சிறுநீரக பிரச்னைகள் வருவதற்கும் இவைதான் காரணம்'' என்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி.
 
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``கொரோனா நேரத்தில் உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டதால் உடல் பருமன் அதிகரித்தது. மேலும், மனஅழுத்தம் அதிகரித்ததும் ஒரு காரணம்.
webdunia
நாம் உண்ணும் உணவில் 3 முதல் 5 கிராம் உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், துரித உணவுகளில் 10 முதல் 15 கிராம் அளவுக்கு உப்பு உள்ளது. உணவில் உப்பு அதிகமாக இருந்தால் சுவை இருக்கும். ஆனால் அவை உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடும் சர்க்கரை, இதயநோய் பாதிப்புகள் அதிகமாவதற்குக் காரணம்.
 
தமிழ்நாட்டில் 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை குறைபாடும் ரத்த அழுத்தமும் இருப்பதே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் நோய்க்கான மருந்து எடுத்தும் அவை கட்டுப்பாட்டில் இல்லை. சர்க்கரை குறைபாட்டுக்காக அரசு வழங்கும் மருந்துகளிலும் தரம் இருப்பதில்லை. ஆனால், தனியாரிடம் வாங்கும் மருந்துகளில் சர்க்கரை நோயோடு ரத்தக்கொதிப்பும் கட்டுக்குள் வருகிறது'' என்கிறார்.
 
இதயநோய் அதிகரிப்புக்கு 2 காரணங்கள்
இதயநோய் அதிகரிப்பு தொடர்பாக, பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` இதயநோய் அதிகரிப்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
 
முதலாவது, கடந்த இரண்டு வருடங்களாக தொற்றா நோய்களான (NCD) சர்க்கரை குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, புற்றுநோய், இதயநோய் ஆகியவை அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்தியதால் இதனை கண்காணிக்கும் பணிகள் என்பது குறைந்துவிட்டன. இது மிக முக்கியமான காரணம்.
webdunia
அடுத்ததாக, கொரோனா காலத்தில் அதற்குண்டான உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது போன்றவை குறைந்துவிட்டன. இதனால் சர்க்கரை குறைபாடும் ரத்தக் கொதிப்பும் அதிகமாகிவிட்டது'' என்கிறார்.
 
`` கொரோனாவால் ஏற்பட்ட மனஅழுத்தம் என்பது முக்கியமானது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், `இரண்டு, மூன்று மாதங்களுக்குப் படியேறக் கூடாது' எனப் பல அறிவுறுத்தல்களை வழங்கினோம். இதனைக் கடைபிடிக்காமல் இருந்ததும் இதயநோய் பாதிப்புக்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் அதிகரித்ததால் சர்க்கரை குறைபாடும் வந்துவிட்டது'' எனக் குறிப்பிடும் குழந்தைசாமி, `` கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தனர். இதனால் உடல் உழைப்பு இல்லாமல் இருந்ததை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டாலும் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருந்தார்கள். மக்களிடம் ஏற்பட்ட நிதிச் சுமையும் மனஅழுத்தத்துக்கு ஒரு காரணம். மதுவின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. மது அருந்திய நபரால் அவரது குடும்பம், நண்பர்கள் எனப் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதனை உணர்ந்துதான் `மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது'' என்கிறார்.
 
நோய் பாதிப்புக்கு உப்பு காரணமா?
தொடர்ந்து பேசிய மருத்துவர் குழந்தைசாமி, ``பள்ளிகளில் விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. பாடம், மதிப்பெண் என்பதாக அது சுருங்கிவிட்டது. உணவு முறைகளிலும் சிறு வயதிலேயே மாற்றம் வேண்டும். துரித உணவுகளின் மீதுதான் மக்களின் கவனம் இருக்கிறது. சரிவிகித உணவு என்பது அரிதாகி வருகிறது. வீட்டில் சாப்பிடக் கூடிய தோசைக்கும் உணவகங்களில் விற்கும் தோசைக்கும் உள்ள உப்பின் அளவு என்பது 3 மடங்கு அதிகம். உணவகங்களில் எந்தளவுக்கு உப்பு பயன்படுத்த வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்'' என்கிறார்.
 
மேலும், `` சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏராளமான பூங்காக்களை அமைத்தனர். ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்கவில்லை. ஊராட்சிக்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக மக்களிடம் மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முன்பெல்லாம் ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இதயநோய் வரும். தற்போதெல்லாம் நாற்பது வயதுக்குள்ளவாகவே மாரடைப்பு வருவதற்கு இவையெல்லாம்தான் பிரதான காரணங்கள். இவற்றைச் சரிசெய்தாலே என்.சி.டி எனப்படும் தொற்றா நோய்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம்'' என்கிறார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேயாக வந்து மிரட்டும் தாய்..! அலறி ஓடிய இளம்பெண்! – மணப்பாறையில் பீதி!