Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'கண்கள் மட்டுமே சந்தித்தன, காதல் தொடங்கியது' – ஒரு தன்பாலின தம்பதியின் கதை!

Advertiesment
'கண்கள் மட்டுமே சந்தித்தன, காதல் தொடங்கியது' – ஒரு தன்பாலின தம்பதியின் கதை!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (12:02 IST)
"திருமணம் செய்துகொண்ட பலரும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அதேபோல் தன்பாலின தம்பதிகளாக இணைந்து, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, நல்ல பெற்றோராக வளர்க்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது. அந்த உரிமையை சட்டப்பூர்வ திருமணம் அளிக்கும்."
 
கார்த்தி இதுகுறித்துக் கூறும்போது அவருடைய குரலில், பொதுச் சமூகத்தில் மாற்றுப் பாலினத்தில் திருமணம் செய்துகொண்டவர்களுக்குக் கிடைக்கக்கூடிய குடும்பம் என்ற அங்கீகாரத்திற்கான ஏக்கம் ஒலித்தது.
 
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாரமதி தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான, சுப்ரியா சுலே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் "சிறப்பு திருமண சட்டதிருத்த மசோதாவை" தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்தார்.
 
இதேபோல், தருமபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில் குமார், "பாலின நோக்குநிலை, பாலின அடையாளங்கள் இவையனைத்தும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்" எனக் குறிப்பிட்டவர், பால் புதுமையினர்களுக்கான உரிமைகளில் சம பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
தன்பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மாற்றுப் பாலின ஈர்ப்பு கொண்டவர்களைப் போலவே சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளலாம் எனச் சட்டம் இயற்றப்பட்டால், அதன்மூலம் திருமணம் செய்துகொண்டு, தாங்களும் சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கார்த்திக்-கிருஷ்ணா தம்பதி.
 
திருமணம் சமூக அங்கீகாரத்தை வழங்குகிறது
webdunia
2018-ஆம் ஆண்டில், சட்டப்பிரிவு 377-ஐ நீக்கியபோது கார்த்திக் தனது பாலின அடையாளத்தை தன் குடும்பத்தினரிடமும் சமூகத்திடமும் தைரியமாக வெளிப்படுத்தினார். அப்போது அவருடைய குடும்பம் அவரை மிக மோசமாக நடத்தியது. அம்மா, அக்கா என அனைவருமே அவரை கவுன்சிலிங் அழைத்துச் செல்வது, தங்கள் பாதிரியாரிடம் அழைத்துச் சென்று மனதை மாற்ற முயல்வது, தாக்குவது, வீட்டை விட்டு வெளியேறவிடாமல் வைத்திருப்பது எனப் பலவற்றையும் செய்தனர்.
 
ஆனால், கார்த்திக் தனது பாலின அடையாளத்தை வெளிப்படுத்துவதைத் தவறவிடவில்லை. தன்பாலின சமூகத்தினருக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் சகோதரன் அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.
 
கோவிட் ஊரடங்கின்போது, இயலாதவர்களுக்கான உதவிகளை சகோதரன் அமைப்பு செய்துகொண்டிருந்தது. கார்த்திக்கும் அதில் பங்கு வகித்தார். அப்போதுதான் அவருக்கும் கிருஷ்ணாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
 
"நான் அவனை முதல்முறை பார்க்கும்போது, மாஸ்க் அணிந்திருந்தான். எங்களுடைய கண்கள் மட்டுமே சந்தித்தன," என்று தங்கள் முதல் சந்திப்பை விவரிக்கிறார் கார்த்திக்.
 
அங்கு தொடங்கிய அவர்களுடைய பழக்கத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே 3 மாதங்கள் ஆனது. அதற்குப் பிறகு, "கார்த்திக் அவருடைய வீட்டை விட்டு வந்து என்னுடன் வாழத் தொடங்கினார்.
webdunia
வழக்கமாக ஒரு கணவன் மனைவிக்குள் என்னென்ன பிரச்னைகள், மகிழ்ச்சிகள் வருமோ, அவையனைத்துமே எங்களுக்குள்ளும் நிகழும். இனியும் வரும். அதையும் பார்ப்போம்," என்று கிருஷ்ணா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "அந்த சண்டைகள் தான் எங்களிடையே காதலை இன்னும் அதிகப்படுத்துகிறது," என்று இடைமறித்தார் கார்த்திக்.
 
அவர்களுடைய இந்த அழகான காதலை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க சிறப்புத் திருமணச் சட்டம் வேண்டும் என்கிறார் கார்த்திக். "மாற்றுப் பாலினத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள், சமூகத்தில் வெளிப்படையாக தம்பதியாக இருக்கிறார்கள். அது எங்களுக்கும் தேவை.
 
சராசரியாக ஒரு கணவன்-மனைவியைப் பார்த்தால், அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள யாரும் முயல மாட்டார்கள். ஆனால், நாங்கள் கணவரும் கணவருமாகச் சென்றால், எங்களிடம் தவறாக நடந்துகொள்வார்கள், தவறாகப் பேசுவார்கள். அது நடக்காமல் இருக்க எங்களுக்கும் அந்த உரிமை வேண்டும்.
 
நாங்கள் வாடகைக்கு வீடு தேடிச் சென்றாலும் கூட, நண்பர்கள் என்று சொல்லித்தான் கேட்கவேண்டும். வெளிப்படையாக நாங்கள் கே தம்பதி என்று கூறிக் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வீடு கிடைக்காது. சிறப்புத் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் இந்த இன்னல்கள் முடிவுக்கு வரலாம்," என்கிறார் கார்த்திக்.
 
தன்பாலினத்தவர்கள் நகரங்களில் மட்டுமே இல்லை
ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, சுப்ரியா சுலே, "தன்பாலின சமூகத்தினருக்கு, திருமணம் மூலமாகக் கிடைக்கும் சொத்துரிமை, ஓய்வூதியம் போன்ற மாற்று பாலினத்தில் திருமணம் செய்துகொள்பவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் கிடைப்பதில்லை.
 
ஆகவே, சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம், தன்பாலினத்தவரின் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டியது மிகவும் அவசியம்," என்று குறிப்பிட்டார்.
webdunia
தன்பாலின சமூகத்தினருக்காகச் செயல்பட்டு வரும் ஸ்ரீஜித் சுந்தரம், இதுகுறித்துப் பேசியபோது, "சட்டப்பிரிவு 377 இருக்கும்போது கூட அதைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. ஆனால், தன்பாலின சமூகத்தினருக்குத்தான் அதனால் தாங்கள் எதிர்கொண்ட வலியும் வேதனையும் தெரியும்.
 
அந்தச் சட்டம் நீக்கப்பட்டபோது, தன்பாலின சமூகத்தினரிடையே பரவலாகப் பேசப்பட்டது தன்பாலின திருமணம். திருமண சட்டம் என்பது இந்து முறைப்படியோ பிற மத முறைகளின்படியோ அல்லாமல், சிறப்பு சட்டத்தின் கீழ் திருமண ஒப்பந்தமாக இதைக் கொண்டு வர வேண்டும் என்பதையே தன்பாலின சமூகத்தினர் கேட்கிறார்கள்.
 
அதோடு, தன்பாலின சமூகத்தினர் நகரங்களில் மட்டுமே இருப்பதைப் போன்ற தோற்றம் உள்ளது. அவர்கள் சிற்றூர்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ளார்கள். இந்த சட்டப்பூர்வ திருமண ஒப்பந்தத்தின் மூலம் அவர்கள் அனைவருக்குமே குடும்பப் பாதுகாப்பு மட்டுமின்றி குடும்பத்திற்குள் இது குறித்துப் பேசுவதற்கான சூழலும் ஏற்படும். ஒருவர் தன்பால் ஈர்ப்பாளரோ திருநங்கையோ திருநம்பியோ என குடும்பத்திற்குத் தெரியவந்தால், முதலில் அவருக்குச் சொத்தில் பங்கில்லை என்றுதான் கூறப்படுகிறது.
webdunia
எவ்வளவோ பேர் சொந்த ஊருக்கே செல்லமுடியாமல் வாழ்கிறார்கள். அப்படியிருக்கும்போது, இதுபோன்ற சம உரிமை மற்றும் பாதுகாப்பிற்கான சட்டம் நிறைவேறும்போது அதைச் சரிசெய்ய முடியும்," என்கிறார்.
 
"தன்பாலின திருமணம் குறித்து தொடர்ந்து பேசவேண்டும்"
தன்பாலின திருமணத்தின் அவசியம் குறித்துப் பேசிய சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா, "இதை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமெனில், 2021-ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலின சமூகத்தவரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மனித நேயத்துடன் அணுக வேண்டும், கல்வியிலும் கூட மாற்றங்கள் வர வேண்டும் என்று குறிப்பிட்டார். அவருடைய தீர்ப்பு மதிக்கப்பட வேண்டுமெனில், மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
 
ஆண்-ஆண் உறவோ, பெண்-பெண் உறவோ, இருபாலின உறவோ எதுவுமே இயற்கைக்கு விரோதமானது அல்ல என்பது தெளிவாக இருக்கும்போது, இன்னமும் இத்தகைய உரிமைகளை அங்கீகரிக்காமல் இருப்பது சரியல்ல. திருமணம் குறித்துத் தொடர்ந்து பேசுவதே அதைச் சாத்தியப்படுத்தும்," என்கிறார்.
 
கண்ணியமான வாழ்க்கை
தருமபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில் குமார் இதுகுறித்துப் பேசியபோது,"ஏற்கெனவே தனித்தனி குழுக்களாக தங்களுக்கான உரிமைகளைக் கோரி வருகிறார்கள். அவை அனைத்தையுமே ஒருங்கிணைத்து, சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும், தனிமைபடுத்தப்படக் கூடாது, அவர்களுடைய உரிமைகளை, பாலின தேர்வுகளை அங்கீகரித்து, சட்டமாக இயற்ற வேண்டிய தேவை உள்ளது," என்றார்.
 
மேலும், "இது நிறைவேறினால், மிகப்பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும். மறைமுகமான வாழ்க்கையாக வாழ வேண்டியதில்லை. அனைவரும் தைரியமாக சமூகத்தில் கண்ணியத்தோடு வாழமுடியும்.
 
இருப்பினும், திருமணம் மூலம் கிடைக்கக்கூடிய உரிமைகள் அனைத்தும் கிடைப்பதற்கு, அந்தந்த சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
 
சொத்துரிமை சட்டம், குழந்தையை தத்து எடுப்பதற்கான சட்டம் ஆகியவற்றில், சட்ட திருத்த மசோதாக்களை கொண்டு வருவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கம் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது, அனைத்து பிரிவுகளிலும் உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்க முடியும், ஆதரவும் கிடைக்கும். அதற்கான தொடக்கமாகவே தனிநபர் மசோதா இருக்கும்.
 
அதோடு இதுகுறித்த விவாதம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதே நேர்மறையானது தான். மக்கள் இதை விவாதிக்கத் தொடங்குவார்கள். அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த முயற்சிகள் நிகழும். அது பால் புதுமையினருக்கு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்," என்று கூறினார்.
 
கார்த்திக்-கிருஷ்ணா தம்பதிகளைப் போலவே இன்னும் பல கணவர்-கணவர்களும் மனைவி-மனைவிகளும், சட்டப்பூர்வ திருமண அங்கீகாரத்தோடு சமூகப் பாதுகாப்பும் சம உரிமைகளும் கிடைக்கும் நாளை எதிர்நோக்கியுள்ளார்கள்.
 
"நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோமோ இல்லையோ, இப்போதே மனதளவில் அப்படித்தான் வாழ்கிறோம். இருந்தாலும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதன் மூலம், எங்களால் குடும்ப அட்டையைப் பெற முடியும். நாங்களும் ஒரு குடும்பமாக அங்கீகரிக்கப்படுவோம். எங்களால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும். நாங்களும் பெற்றோர் ஆவோம். எங்களுக்கு சொத்துரிமை கிடைக்கும்.
 
இது எங்கள் சமூகம் மொத்தத்திற்கும் இந்தச் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து, கண்ணியத்தோடு வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும்." என்கிறார்கள், கார்த்திக்-கிருஷ்ணா தம்பதி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் சொத்து முழுசும் ராகுல் காந்திக்குதான்..! – மூதாட்டியின் ஆச்சர்ய செயல்!