Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தை மீறி நடக்கும் கரிமூட்ட தொழில் - கள நிலவரம்!

சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தை மீறி நடக்கும் கரிமூட்ட தொழில் - கள நிலவரம்!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (11:33 IST)
தமிழகத்தின் வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல விவசாயிகள் இந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். ஒரு பக்கம் சீமைக் கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், மறு பக்கம் விவசாயிகளுக்கு பலன் தரும் மரமாக உள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல், சாயல்குடி, மல்லல், திருப்புல்லாணி, கடலாடி, முதுகுளத்தூர், ஆப்பநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகும். இந்தப் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும்.
 
பொய்த்து போன விவசாயம்
 
மழையை நம்பி பருத்தி, வத்தல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். பருவமழை ஏமாற்றம் அளித்ததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.
 
ஆனால் மற்றொரு பக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சிக்கு முக்கிய காரணம் சீமைக் கருவேல மரங்களே என்கின்றனர் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள். சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
webdunia
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் முதலில் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். பிறகு, 32 மாவட்டங்களிலும் அகற்ற உத்தரவிட்டனர்.
 
இப்பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 வழக்கறிஞர்கள் வீதம் மொத்தம் 160 பேர் நீதிமன்ற ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
சீமைக் கருவேல மரம் என்றால் என்ன
சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் பரோ சோயிக் ஜூலி ஃப்ளோரா. இத்தாவரம் நாட்டு கருவேல மரத்தை ஒத்து இருப்பதாலும், வெளிநாட்டில் இருந்து வந்ததாலும் சீமைக் கருவேலம் என்று அழைக்கப்படுகிறது.
 
வயல்களின் ஓரங்களில் வேலிக்காக இம்மரங்கள் வளர்க்கப்பட்டதால் வேலிக்கருவேல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் தாயகம் மெக்சிகோ, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா ஆகும்.
 
ஆனால் உலகில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள 129 நாடுகளில் இத்தாவரம் காணப்படுகிறது.
 
எங்கிருந்து வந்தன இத சீமைக் கருவேல மரங்கள்?
webdunia
சீமைக் கருவேல மரம் 1870-ல் சமையலுக்கு கான எரிபொருளாகவும், பயிர்களுக்கு வேலிகளாகவும் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் 1970 முதல் 1990 வரை வேகமாகப் பரவி தற்போது இந்தியாவில் ஆந்திரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.
 
காலப்போக்கில் சமையலுக்கான எரிபொருளாக இதன் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட இந்த சீமைக் கருவேல மரங்கள் விவசாயம் செய்வது குறைந்ததால் விளை நிலங்களிலும், முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்ட நீர்நிலைகளிலும் செழித்து வளர்ந்துள்ளது.
 
சீமைக் கருவேல மரத்தால் நிலத்தடி நீர் குறைவது எப்படி?
சீமைக்கருவேல மரங்கள் நிலத்தின் ஆழத்தில் ஊடுருவிச் சென்று நீரை உறிஞ்சி விடுவதால் அருகில் உள்ள ஏனைய தாவரங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் செய்து பிற தாவரங்களின் வளர்ச்சியை இது தடை செய்கிறது.
 
மழை இல்லாத காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் காற்றில் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது. மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது. இத்தாவரத்தின் ஆணி வேர் மட்டுமல்லாமல் பக்க வேர்கள் வலிமையானவை. எனவே மழைநீர் நிலத்தை ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடை செய்கின்றன.
 
இத்தாவரம் மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது.
 
தண்ணீர் இல்லாமல் கரிமூட்டம் போடும் தொழில் பாதிப்பு
பருவ மழை பொய்த்து போனதால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாய தொழிலை கைவிட்ட விவசாயிகள், விவசாயத்திற்கு அடுத்து கரிமூட்டம் போடும் தொழிலை பிரதான தொழிலாக செய்ய தொடங்கினர். இப்பகுதியில் கரிமூட்டம் தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.
 
கரிமூட்டம் தொழிலுக்கு தண்ணீர் முக்கிய தேவை. அதாவது, கரி மூட்டம் போட்டு எரிக்கும் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும் போது அதை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். அப்போது தான் தரமான கரி கிடைக்கும். ஒவ்வொரு ரக கரிக்கும் ஒவ்வொரு விலை உண்டு. தண்ணீர் இல்லையென்றால் முழுவதும் சாம்பலாகி விடும்.
 
எனவே கரி மூட்டம் தொழிலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. வறட்சி காலங்களில் பணம் கொடுத்து டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவம் தவறி பெய்த அதீத மழையால் கரி மூட்டம் தொழிலுக்கு கண்மாய், குளம், கிணறுகளில் தேவையான தண்ணீரை எடுத்து கொள்கின்றனர்.
webdunia
தூர்கரி, உருட்டு கரி, பக்கோடா கரி, குச்சி கரி என பல்வேறு ரகங்களில் மரக்கரி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிமெண்ட் தொழிற்சாலைகள், வேதி தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
 
மேலும் தேநீர் கடைகளில் பாய்லர்களில் தண்ணீரை சுட வைப்பதற்கு, பட்டறைகள், சுண்ணாம்பு தயாரிப்பிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
 
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்காக ராமநாதபுரத்தில் இருந்து கரி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் முக்கிய தொழிலாக கரிமூட்டம் தொழில் உள்ளது.
 
இந்தத் தொழிலில் ஆண்கள் மட்டுமின்றி கிராமப்புற பெண் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் ஏராளமான தொழிலாளர்கள் கரிமூட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
கரிமூட்டம் போடுவது விவசாயிகளின் சீசன் தொழில்
இது குறித்து கரிமூட்டம் தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜ்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், என்னுடைய பாரம்பரிய தொழில் விவசாயம். ஜனவரி மாதம் விவசாயம் முடிந்த பிறகு காட்டு கருவேல மரங்களை வெட்டி மூட்டம் போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம்.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு மாற்றாக கரிமூட்டம் போடும் தொழில் மட்டுமே உள்ளது. எனவே சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு இது தான் மாற்றுத்தொழில்.
 
விவசாய தொழில் ஆரம்பித்த பின்பு கருவேல மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டு விவசாய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்கிறார் ராஜ்குமார்.
 
தீயில் சிக்கி பெண்கள் உயிரிழப்பு
இது குறித்து கரிமூட்டம் தொழில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளி ஆறுமுகம் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கருவேல மரங்களை வெட்டி அதில் மூட்டம் போட்டு வியாபாரம் செய்து வருகிறேன்.
 
இந்தப் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் பார்க்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யாததால் விவசாய தொழிலை விட்டு விட்டு மக்கள் பெரும்பாலானோர் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகின்றனர்.
 
இந்த தொழிலில் பல கஷ்டங்கள் இருக்கிறது. தொடர்ந்து காலை முதல் மாலை வரை புகையில் இருப்பதால் சுவாச கோளாறு ஏற்படும், இருமல், டிபி நோய் வரும்.
 
கரிமூட்டம் மீது ஏறும் போது கவனக் குறைவாக இருந்தால் ஆளை உள்ளே இழுத்து விடும். இதனால் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்டு, பல பெண்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
 
கரி மூட்டைக்கு 600 முதல் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு போட்டு கரிமூட்டம் போட்டால் எங்களுக்கு அதில் இருந்து 3 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகிறார் பெண் தொழிலாளி ஆறுமுகம்.
 
கரிமூட்டம் தொழிலுக்கு மாற்றாக பனை தொழிலை ஊக்குவிக்க வேண்டும்
கருவேல மரங்களால் விவசாயம் எப்படி பாதிக்கப்பட்டது என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல், சாயல்குடி, மல்லல், இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் விவசாயம் சார்ந்த பகுதிகள்.
 
இந்தப் பகுதியில் பூமியில் பத்தடி தூரம் தோண்டினால் நல்ல தண்ணி வந்ததாக தரவுகள் உள்ளது. ஆனால் தற்போது சீமை கருவேல மரங்களின் அசுர வளர்ச்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
 
சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்கிறது. காட்டு கருவேல மரங்களுக்கு உரம் தேவையில்லை என்பதால் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.
 
இந்த மரம் பூமியில் ஒரு கொடிய நோய் போல பரவி வருகிறது. விவசாய சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிபதிகள் கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட்டார்.
 
ஆனால் அரசு சீமைக் கருவேல மரங்களை முறையாக அழிக்கவில்லை. சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்து விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்திற்கு மாற்றுத் தொழிலாக கரிமூட்டம் போடும் தொழில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளது.
 
இந்த பனை மரங்களை மறுசீராய்வு செய்து அதிலிருந்து கிடைக்கும் பனை பொருட்கள் வைத்து மாற்று தொழில் செய்யலாம். இதற்கு அரசாங்கம் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் எம்.எஸ்.கே. பாக்கியநாதன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிக்கலாவை இணைத்தால் மட்டும்தான் வெற்றி! – ஓபிஎஸ் முன் பேசிய அதிமுக பிரமுகர்!