Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேன் செர்னோபில் அணுஉலையை அழிவில் இருந்து பாதுகாத்த ஊழியர்கள் - எப்படி முடிந்தது?

ukraine atomic
, சனி, 9 ஏப்ரல் 2022 (23:55 IST)
வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையம், படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது. தற்போது மீண்டும் யுக்ரேன் கட்டுப்பாட்டிற்கே வந்துள்ளது. பிபிசியின் யோகிதா லிமாயே ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அணுமின் நிலையத்தின் உள்ளே சென்ற முதல் செய்தியாளர்களில் ஒருவர்.
 
பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில், ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் செர்னோபிலை சுற்றி வளைத்து, பெலாரஷ்ய எல்லையிலிருந்து யுக்ரேனுக்குள் சுமார் 16 கி.மீ தொலைவில் ரஷ்ய படைகள் நுழைந்திருந்தன.
 
அணுமின் நிலையத்தைப் பாதுகாத்த சுமார் 170 யுக்ரேனிய தேசிய காவல்படையினர், ஆலையின் அடித்தளத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் ரஷ்ய வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என்று வளாகத்தைச் சோதனையிட்டனர்.
 
பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில், ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசோடோமின் குழுக்கள் வரவழைக்கப்பட்டன.
 
செர்னோபில் ஊழியர்கள் ஆலையின் பராமரிப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்தனர். இது செயல்பாட்டில் இருக்கும் அனல்மின் நிலையம் அல்ல. ஆனால், உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்துள்ள இந்த இடத்தில் கதிரியக்க கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. 1986-ஆம் ஆண்டில் நடந்த விபத்திற்குப் பிறகு சுத்தம் செய்வதற்கு மேலும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. அங்கு நிலைமை சரியாகக் கண்காணிக்கப்படாவிட்டால், அணுசக்தி பொருட்கள் வெளியேறும் அபாயம் உள்ளது.
 
"இந்தக் கட்டமைப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரோசோடோம் குழுவைச் சேர்ந்தவர்கள் விரும்பினார்கள். அனைத்து நடைமுறைகள், ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற விரும்பினார்கள். தொடர்ச்சியான கேள்விகள், சில நேரங்களில் வலுக்கட்டாயமாக கேட்கப்பட்டதால் நான் அச்சப்பட்டேன்," என்று அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சு மேற்பார்வையாளர் ஒலெக்ஸாண்டர் லொபாடா கூறினார்.
 
 
 
அணு மின் நிலையத்தின் பிரதான கட்டடத்தின் மேல் தளத்தில், அந்தக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய அறைகள் உள்ளன. அவை நீண்ட, குறுகிய பாதையின் இருபுறமும் அமைந்துள்ளன. சில அறைகள் பூட்டப்பட்டிருந்தன. ரஷ்யர்களுக்கு சாவி கிடைக்காததால், அறைகளில் பூட்டு பதிக்கப்பட்டிருந்த கதவின் பகுதியை வெட்டினார்கள்.
 
"நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. மேலும், அவர்களை புண்படுத்தாமல் இருக்க கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. இதனால், அவர்கள் எங்கள் பணியாளர்களை அந்தக் கட்டமைப்பை நிர்வகிக்க அனுமதித்தார்கள்," என்று பொறியாளர் வலேரி செமனோவ் கூறினார்.
 
அணு மின் நிலையத்தின் மின்சாரம் மூன்று நாட்களுக்கு துண்டிக்கப்பட்டபோது, ஜெனரேட்டரை இயக்குவதற்கு எரிபொருளைக் கண்டுபிடிக்கத் துடித்ததாகவும் ரஷ்யர்களிடம் இருந்து சிலவற்றைத் திருடுவதற்குக் கூட முயன்றதாகவும் வலேரி கூறினார்.
 
"மின்சாரத்தை இழந்திருந்தால், அது பேரழிவாக இருந்திருக்கும்" என்று ஒலெக்ஸாண்டர் விளக்கினார். "கதிரியக்க பொருட்கள் வெளியேறியிருக்கலாம். நான் என் உயிருக்குப் பயப்படவில்லை. ஆலையைக் கண்காணிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று தான் பயந்தேன். அது மனித குலத்திற்கே சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்குமே என்று அஞ்சினேன்," என்கிறார் வலேரி.
 
 
"ரெட் ஃபாரெஸ்ட்" என்றழைக்கப்படும் ஆலைக்குப் பின்புறம் இருக்கும் பகுதி, பூமியில் மிகவும் அதிக கதிரியக்கமுள்ள இடங்களில் ஒன்றாகும். யுக்ரேன் ராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகள் ரஷ்ய வீரர்கள் அகழிகளைத் தோண்டுவது, அங்கேயே தங்கியிருப்பது போன்றவற்றைக் காட்டுகிறது. இதை அணுமின் நிலைய அதிகாரிகளும் பிபிசியிடம் உறுதி செய்தார்கள்.
 
அணுசக்தி பாதுகாப்பு பற்றி ராணுவ வீரர்களுக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்துள்ளது என்பதற்கு இது சான்றாக விளங்குகிறது.
 
பிரதான கட்டடத்தின் அடித்தளத்தில், தங்குமிட பாணியிலான அறைகள் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டுள்ளன. தரையில் விரிப்புகள், மெத்தைகள், உடைகள், காலணிகள் மற்றும் யுக்ரேனிய தேசிய காவல்படையினரின் பிற தனிப்பட்ட உடைமைகள் உள்ளன. செர்னோபில் அதிகாரிகள், "ரஷ்ய வீரர்கள் வெளியேறும்போது தங்களால் முடிந்ததைக் கொள்ளையடித்தார்கள். மேலும், அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தேசிய காவல் படையினரையும் உடன் அழைத்துச் சென்றனர்.
 
யுக்ரேரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ (இடதுபுறம்), செர்னோபிலுக்கான அணுகல் மீண்டும் திறக்கப்பட்ட உடனேயே தளத்தைப் பார்வையிட்டார்.
 
படக்குறிப்பு,
 
யுக்ரேரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ (இடதுபுறம்), செர்னோபிலுக்கான அணுகல் மீண்டும் திறக்கப்பட்ட உடனேயே தளத்தைப் பார்வையிட்டார்.
 
"அணுமின் நிலையத்தை எங்களால் பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்தது. ஆனால், அவர்கள் எங்களுடைய 169 வீரர்களை உடன் கொண்டு சென்றது வருத்தமளிக்கிறது," என்று வலேரி கூறினார்.
 
அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், அவர்கள் ரஷ்யாவில் இருப்பதாக செர்னோபில் ஊழியர்கள் நம்புகிறார்கள்.
 
யுக்ரேனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, ஆலையின் பணியாளர்களுக்கான உணவு மற்றும் பிற பொருட்களுடன் வெள்ளிக்கிழமை செர்னோபிலுக்குச் சென்றார்.
 
அவர், "நாளை ரஷ்ய படைகள் இங்கு வர முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோமா என்றால், இல்லை என்பதே பதில். புதின் முற்றிலும் கணிக்க முடியாதவர். மேலும், அணுசக்தி ஆபத்தை எல்லைகளுக்குள் வரையறுத்துவிட முடியாது. அது கிழக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா மற்றும் கிரேட் பிரிட்டனைக் கூட அடையலாம்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை !