Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மர்ம உலோகத் தூண், விடாது தோன்றும் சம்பவங்கள், மெல்ல விலகும் புதிர்கள்

மர்ம உலோகத் தூண், விடாது தோன்றும் சம்பவங்கள், மெல்ல விலகும் புதிர்கள்
, புதன், 16 டிசம்பர் 2020 (13:29 IST)
பாலைவனத்தில், பாறைகள் சூழ்ந்த ஒரு விநோதமான மனித நடமாட்டம் இல்லாத நிலப்பரப்பில் 10 - 12 அடி உயரத்தில் உலோகத் தூண் திடீரென ஓங்கி உயர்ந்து கம்பீரமாகத் தோன்றினால் எப்படி இருக்கும்? அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் உறைந்து போவீர்கள் தானே?

கடந்த நவம்பர் 18-ம் தேதி, அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் பெரிய கொம்பு ஆடுகளை எண்ணுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த வன விலங்குத்துறை அதிகாரிகள் அப்படி ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்துக்கு ஆளானார்கள்.

பாறைகளுக்கு நடுவே காணப்பட்ட அந்த பிரும்மாண்டமான உலோகப் பட்டையை யாரோ நட்டு வைத்திருந்தார்கள். இதற்கு முன்னால் தன் விமானப் பயண வாழ்கையில் இப்படி ஒரு அதிசயத்தைப் பார்த்ததில்லை என்கிறார் அந்த ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமானி ப்ரெட் ஹட்சிங்ஸ்.

இந்த தூணை முதன் முதலில் பார்த்தவர், அவரோடு பயணித்த உயிரியலாளர் தான் என்றார்.

இந்த உலோக தூணை யார் நட்டு வைத்தார்கள் என்பதற்கு கூட அடையாளங்கள் இல்லை.
இந்த உலோகத் தூணை, ஏதாவது புது ரக கலைஞர்கள் நட்டுவைத்திருக்கலாம் அல்லது 2001: ஸ்பேஸ் ஒடிசி என்கிற படத்தின் ரசிகன் நட்டுவைத்திருக்கலாம் என்கிறார் விமானி ப்ரெட் ஹட்சிங்ஸ்.

யூடா பொது மக்கள் பாதுகாப்புத் துறை, இந்த உலோகத் தூண் குறித்த விவரங்களைப் படத்துடன் வெளியிட்டது. இந்த தூண் இருக்கும் இடத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால் அடுத்த 48 மணி நேரத்துக்குள், முதல் நபர் அங்கு காலடி எடுத்துவைத்துவிட்டார்.

ரெட்டிட் வலைதளத்தில், இந்த உலோகத் தூண் இருக்கும் இடம் வெளியாகி இருந்தது. முதல் நபராக 33 வயது முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியான டேவிட் சுர்பர் அந்த இடத்தைக் கண்டடைந்தார். அதன் பிறகு ஏகப்பட்ட மக்கள், யூடாவில் உலோகத் தூண் இருக்கும் இடத்தை நோக்கிப் படை எடுத்தார்கள்.
webdunia

மக்கள் மத்தியில் பரபரத்துக் கொண்டிருந்த இந்த உலோகத் தூண் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விட்டது. காணாமல் போன இடத்தையும் மக்கள் விடவில்லை. உலோகத் தூணின் எச்சங்களுடன், புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர்.

சிறிது நாட்களுக்கு மர்மம் விலகாமல் இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான், 'தி மோஸ்ட் ஃபேமஸ் ஆர்டிஸ்ட்' என்கிற குழு யூடா மற்றும் கலிஃபோர்னியாவில் உலோக தூணை நட்டுவைத்தது தாங்கள் தான் என பொறுப்பேற்றது. யூடாவில் இருந்த உலோகத் தூண் 45,000 டாலர் என விலைகூறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.

சரி எல்லாம் சுபமாக முடிந்தது என்று பார்த்தால், மீண்டும் பிரிட்டனில் ஐல் ஆஃப் விட் (Isle of Wight) என்ற பகுதியில், இதே போன்ற ஒரு மர்மத் தூண் தோன்றியது.

பிரிட்டனின் தெற்கு கடற்கரை ஓரம் தோன்றிய அந்தத் தூண், இந்த முறை உலோகம் அல்ல, கண்ணாடி.

பிரிட்டனுக்கு வருவதற்கு முன்பே, அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலும், ரொமானியாவிலும் இது போன்ற தூண்கள் வந்ததாகச் செய்திகள் வெளியாயின.

ஒரு கட்டத்துக்குப் பிறகு, டாம் டன்ஃபோர்ட் என்பவர், இந்த கண்ணாடி தூணை வடிவமைத்தது தான் தான் என ஒப்புக்கொண்டார். இவர் கண்ணாடித் தூணை நிறுவியது, நேஷனல் ட்ரஸ்டுக்குச் சொந்தமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் உடைந்த நிலையில் கிடந்த இந்த தூணை அகற்றியது பிரிட்டனின் நேஷனல் ட்ரஸ்ட். அதோடு, இந்த உடைந்த பகுதிகளை இ-பே வலைதளத்தில் விற்பனைக்காக பட்டியலிட்டு இருக்கிறது. இதுவரை 730 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை கோரி இருக்கிறார்கள்.

இந்த இரண்டு நாடுகள் மட்டுமின்றி, ரூமேனியா, பிரிட்டனில் இருக்கும் க்ளாஸ்டன்பரி & டார்ட்மோர், போலாந்து, பெல்ஜியம், அடிலெய்ட் ஆஸ்திரேலியா என பல நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற தூண்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் யூடா மற்றும் பிரிட்டனின் ஐல் ஆஃப் விட் தூண்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகி இருக்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் திடீரென முளைக்கும் தூண்களும் மனித முயற்சிகள் தானா என்பது விரைவில் தெளிவாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்துக்கு ஒன்னுமே தெரியாது! – திமுக பக்கம் ஜம்ப் அடித்த தேமுதிக பிரபலம்!