Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்வெளி தொலைநோக்கி எண்ணி முடித்த 180 கோடி நட்சத்திரங்கள்: கயா வெளியிடும் வியப்பூட்டும் தகவல்கள்

விண்வெளி தொலைநோக்கி எண்ணி முடித்த 180 கோடி நட்சத்திரங்கள்: கயா வெளியிடும் வியப்பூட்டும் தகவல்கள்
, புதன், 16 டிசம்பர் 2020 (10:33 IST)
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். தலையில் இருக்கும் மயிர். ஆற்றில் இருக்கும் மணல். இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கான  எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கம்.

ஆனால், எண்ண முடியாதவை என்று கருதப்பட்ட நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில்  உள்ளன? விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.
 
பல அதி நவீன தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பட்டியலிடும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்து விரிவாக்கப்படும் இத்தகைய ஒரு நட்சத்திரப்  பட்டியலில் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்தி இத்தகவலைத்  தெரிவிக்கிறது.
 
விண்வெளியில் நட்சத்திரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக கொட்டிக் கிடக்கவில்லை. நம்முடைய சூரியக் குடும்பத்தில் கோள்கள் ஓர் ஒழுங்கில் சூரியனை சுற்றி  வருவதைப் போல, நட்சத்திரங்களும் கூட்டம் கூட்டமாகவே இருக்கின்றன. ஒரு கூட்டத்தின் மையத்தில் உள்ள பேரடர் கருந்துளையை அந்தக் கூட்டத்தில் உள்ள  நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. நம்முடைய சூரியனும் அப்படி ஒரு நட்சத்திரம்தான்.
 
நம்முடைய சூரியன் இடம் பெற்றிருக்கிற நம்முடைய நட்சத்திரக் கூட்டத்தின் பெயர்தான் பால்வழி மண்டலம் என்பது.
 
தற்போது கயா தொலைநோக்கி எண்ணி அடையாளப்படுத்தியிருக்கிற 180 கோடி விண்மீன்களும் நம்முடைய நட்சத்திரக் கூட்டமான பால்வழி மண்டலத்தில்  இருப்பவைதான்.
 
இந்த கயா தொலைநோக்கி வழக்கமான தொலைநோக்கியைப் போல புவியில் எதோ ஒரு இடத்தில் நிறுவப்பட்டதல்ல. இது விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு  விண்கலம்.
 
2013-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்ட இந்த கயா தொலைநோக்கி விண்கலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு வேலை செய்யும். இந்த தொலைநோக்கி  விண்கலத்தின் நோக்கமே நம்முடைய பேரண்டத்தை, அதிலும் குறிப்பாக நமது பால்வழி மண்டலத்தை ஆராய்வதுதான்.
 
கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வருணிக்கப்படும் இந்த தொலைநோக்கி தினமும் விண்வெளி பற்றி புதிது புதிதாக நாம் அறிந்திராத ஏராளமான தகவல்களைக்  கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருக்கிறது. இது தரும் தரவுகளை வைத்து தினமும் சுமார் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளாவது வெளிவருகின்றன.

 
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் இதன் வேகம் அபரிமிதமானது. விண்வெளி தொலைநோக்கிகளில் மிகவும் புகழ்பெற்றதான ஹபுள் தொலைநோக்கிகூட இந்த அளவுக்கு வேகத்தில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவில்லை என்கிறார்கள்.
 
கயா தொலைநோக்கி உற்பத்தி செய்யும் தரவுகள் விண்வெளி இயற்பியலில் ஒரு சுனாமியைப் போல என்கிறார் பேராசிரியர் மார்ட்டின் பார்ஸ்டோ. இவர்  பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்.
 
நம் அருகில் உள்ள நட்சத்திரங்கள், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் என்று விண்வெளி இயற்பியலில் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு பேரண்டத்தின்  விளிம்புவரையில் செல்கிறது இந்த தொலைநோக்கி என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.
 
புவி சூரியனைச் சுற்றும்போது, ஒப்பீட்டளவில் அருகில் உள்ள நட்சத்திரங்கள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை நோக்கி நகர்வதாகத் தோன்றும். பேரலாக்ஸ்  கோண அளவீடு என்ற முறையைப் பயன்படுத்தி குறிவைக்கிற நட்சத்திரம் அப்போது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கணக்கிட முடியும்.
 
திரும்பத் திரும்ப ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை கவனிப்பதன் மூலம் கயா தொலைநோக்கி கோணப் பிழைகளை மிகவும் குறைக்கிறது. கோணங்களை அளக்க  கணித்ததில் பாகை என்ற அளவைப் பயன்படுத்துகிறோம். வட்டத்துக்கு 360 பாகை. ஒரு பாகையில் 60-ல் ஒரு பங்கு ஆர்க் நிமிடம் எனப்படுகிறது. ஒரு ஆர்க்  நிமிடத்தில் 60ல் ஒரு பங்கு ஆர்க் நொடி எனப்படுகிறது. அதற்கு அடுத்த நுட்பமான கோண அளவீடு மில்லி ஆர்க். ஒரு பாகையில் 36 லட்சத்தில் ஒரு பங்குதான்  மில்லி ஆர்க். அதைவிட நுண்ணியது மைக்ரோ ஆர்க் நொடி.
 
மிகப் பிரகாசமான நட்சத்திரங்களின் கோணத்தை, தூரத்தை அளவிடும்போது இந்த கயா தொலைநோக்கி 7 மைக்ரோ ஆர்க் நொடி அளவுக்கே பிழைகளைச்  செய்கிறது.
 
அடுத்த 4 லட்சம் ஆண்டுகளில் எப்படி நகரும்...
 
இந்த கயா தொலைநோக்கி வானில் ஒரு பறக்கும் தொப்பியைப் போலத் தோன்றுகிறது. ஆனால், மிக நுட்பமான பொறியியலுக்கான எடுத்துக்காட்டு இது.
 
புவியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த விண்வெளி தொலைநோக்கி, அதில் பொருத்தப்பட்டுள்ள பிரிட்டனில் தயாரான கேமரா  மூலம் வானில் ஒளிர்கிற, நகர்கிற எல்லாப் பொருள்களையும் பதிவு செய்துகொள்கிறது. அதுவும் விழிகளை விரிய வைக்கும் துல்லியத்தோடு.
 
கயா பதிவு செய்துள்ள நட்சத்திரங்கள் அடுத்த நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு எப்படி நகரும் என்கிற கணக்கீட்டை, தொலைநோக்கி திரட்டித் தந்திருக்கிற  தரவுகளின் உதவியோடு கணிக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அய்யா.. இந்த எய்ம்ஸ எப்பய்யா கட்டுவீங்க! – ஆர்டிஐயில் விளக்கமளித்த மத்திய அரசு!