Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடகொரியா - சீனா: தொடர்ந்து நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளுக்கு சீனா காரணமா?

Advertiesment
வடகொரியா - சீனா: தொடர்ந்து நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளுக்கு சீனா காரணமா?
, புதன், 19 ஜனவரி 2022 (15:16 IST)
வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது.

ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து திங்கட்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் ராணுவம் கூறியது. ஜப்பானும் வடகொரியாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனையை உறுதிப்படுத்தியது.

கடந்த இரு வார காலத்தில் வடகொரியாவின் நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா பெலாஸ்டிக் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைப் பரிசோதிக்க ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது, மேலும் கடும் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

ஆனால் வடகொரியா தொடர்ந்து அத்தடைகளை மீறி வருகிறது, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தங்கள் பாதுகாப்பை அதிகரிப்பதாக சபதம் ஏற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ரயில் பெட்டிகளிலிருந்து குறைந்த தொலைவு சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை சோதித்ததாகக் கூறியது. சில நாட்களுக்கு முன் மீண்டும் இரு சோதனைகளை மேற்கொண்டது. அவை ஹப்பர் சோனிக் ஏவுகணைகள் என்று கூறுகிறது வட கொரியா. பொதுவாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் இப்போது ஏன் நடக்கிறது?

ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை மற்றும் நேரம் மிகவும் அசாதாரணமானது. வடகொரியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடக்கும் போது அல்லது தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ராணுவ பயிற்சிகள் குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்த, வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தும்.

ஏவுகணை திறன்களை மேம்படுத்தவும், போருக்கு தயாராக இருக்கவுமே வடகொரியா பொதுவாக ஏவுகணைகளை ஏவும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளும் அதை உறுதிப்படுத்துவதாக கார்னெகி எண்டவ்மெண்ட் ஃபார் இண்டர்நேஷனல் பீஸ் அமைப்போடு தொடர்புடைய நிபுணர் அன்கித் பண்டா கூறினார்.

அதே நேரத்தில் "கிம் ஜாங் உன், உள்நாட்டிலும் சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது: பொருளாதார சிக்கல் நிலவும் சூழலிலும், தேசத்தின் பாதுகாப்பு முன்னுரிமைகள் பின்னடைவக் காணாது என்பதை வெளிப்படுத்த இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் அனுமதிக்கின்றன" என பிபிசியிடம் கூறினார் அன்கித் பண்டா.

வடகொரியா உணவுப் பற்றாக்குறை மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. அதற்கு காரணம் தன்னைத் தானே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டது தான். கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சீனா உடனான வர்த்தகத்தைத் துண்டித்துக் கொண்டது வடகொரியா. சீனாதான் வட கொரியாவின் முக்கிய பொருளாதார மற்றும் அரசியல் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தகம் விரைவில் தொடங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தான் வடகொரியா மிக நெருக்கடியான வாழ்வா சாவா போன்ற சூழலை சந்தித்து வருவதாகக் கூறினார் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். அதே நேரத்தில் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கவும் சபதமேற்றார்., இதில் ஹப்பர்சோனிக் ஏவுகனைகளை மேம்படுத்துவதும் அடக்கம்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதிலிருந்து, அமெரிக்கா உடனான பேச்சு வார்த்தை தேக்க நிலையில் உள்ளது. வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அமெரிக்கா.

இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த வாரம் தான் ஜோ பைடன் அரசு, வட கொரியா மீதான தன் முதல் தடையை விதித்தது.

திங்கட்கிழமை நடத்தப்பட்ட சோதனை, அமெரிக்க தடைக்கு எதிராக வடகொரியாவின் வலுவான எதிர்வினையாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. அதே போல, அமெரிக்காவால் வடகொரியா மீது எந்த விதத்திலும் ஆதிக்கம் செலுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதையும் காட்டுகிறது என ஈவா பெண்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வடகொரிய ஆராய்ச்சிகள் பேராசிரியர் பார் வான் கான் கூறினார்.

சீனா காரணமா?

பெய்ஜிங்கில் மதிப்புமிக்க மற்றும் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. அதற்கு சில வாரங்களுக்கு முன் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் நடந்தன.

"சீனா ஒலிம்பிக் போட்டிகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, வட கொரியா தனது வீட்டு வாசலில் ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதை சீனா வரவேற்காது என நான் கருதுகிறேன்" என வட கொரிய விவகாரங்களின் பகுப்பாய்வாளர் சாட் ஓ'கரோல் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

"இந்த சோதனைகள் தொடர்ந்தால், சீனா தொடர்பான ஏதோ ஒரு விவகாரத்தில் வட கொரியா, வருத்தத்தோடு இருக்கிறது என்கிற சாத்தியக்கூறைப் புறந்தள்ள முடியாது" என்றும் கூறியுள்ளார்.

"இந்தச் சோதனைகளில் சீனா மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், அவை அணு ஆயுதங்களையோ அல்லது நீண்ட தூர ஏவுகணைகளையோ சோதிப்பதில் ஈடுபடாததால், சீனா போதிய அளவுக்கு சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நிரூபிக்க முயலலாம்" என்று கூறினார் அன்கித் பண்டா. அதை அவர் "சீனாவின் சிவப்பு கோடுகள்" என்று அழைக்கிறார்.

வட கொரியா விரைவில் சீனாவுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்கலாம் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில், பியாங்யாங்கின் ஆத்திரமூட்டக் கூடிய இந்த செயல்களோடு சீனா தேவைக்கு அதிகமாக இணக்கமாகச் செல்வதாகத் தெரிகிறது. சீனா வட கொரியாவை பொருளாதார ரீதியில் ஆதரிக்கிறது. ராணுவ ரீதியிலும் ஒத்துழைக்கிறது" என வட கொரிய விவகாரங்களுக்கான நிபுணர் லீஃப் எரிக் ஈஸ்லி பிபிசியிடம் கூறினார்.

"தென் கொரியாவின் அதிபர் தேர்தல் காலத்தில் வட கொரியா அமைதியாக இருக்க விரும்பவில்லை அல்லது சீனா வடகொரிய எல்லை வரை உதவிப் பொருட்களை அனுப்புவதால், அதன் ஆதரவில் வாழ்வது போலத் தோற்றமளிப்பதை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பதைத் தான் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன" என்கிறார் எரிக்.

செய்தியாளர்கள்: டெஸ்ஸா வாங் மற்றும் பிபிசி கொரிய சேவை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம் ஜி ஆர் பல்கலைக்கழகம் தொடர்பான அரசு செய்தி… ஓ பி எஸ் கண்டனம்!