Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணி இடைநீக்கம்

இலங்கையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணி இடைநீக்கம்
, திங்கள், 17 ஜனவரி 2022 (13:15 IST)
இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி - பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியதாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், மேற்படி விரிவுரையாளரால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் பற்றி, அந்த மாணவி தனது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்திய பல்கலைக்கழக உபவேந்தர், அந்தப் பல்கலைக்கழத்தின் பேரவையைக் கூட்டி - விடயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அதனையடுத்து, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, குறித்த விரிவுரையாளரை - பல்கலைக்கழகப் பேரவை, பணி இடைநீக்கம் செய்துள்ளதோடு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது

இந் நடவடிக்கைகளுக்கு முன்னர், குறித்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், தான் தவறாக நடந்து கொண்டமையை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டு, அழுது - மன்னிப்புக் கோரியதாகக் கூறப்படுகிறது. அது குறித்த குரல் பதிவுகள் பிபிசிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இது இவ்வாறிருக்க, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தற்போது பல்கலைக்கழகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனை பல்கலைக்கழகத்தின் நிருவாகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

பல்கலைக்கழகத்தின் பதில்

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டதை அடுத்து, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். பின்னர் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சுமார் 400 மாணவர்களைச் சந்தித்து அவர்களிடம் தைரியமளிக்கும் விதமாக பேசினேன். நடந்த சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், தவறு செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தினேன். தைரியமாக தங்கள் கல்வியை தொடருமாறும் மாணவர்களுக்குக் கூறினேன்" என, உபவேந்தர் ரமீஸ் தெரிவித்தார்.

தற்போது ஆரம்ப கட்ட விசாரணைகள் நடந்து வருவதாகவும், அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலுள்ளவர்களைக் கொண்டு அமைக்கப்படும் குழுவைக் மூலம் முறையான விசாரணைகள் நடதப்படும் எனவும் உபவேந்தர் கூறினார்.

"சம்பந்தப்பட்ட மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நடந்த சம்பவத்துக்கு பல்கலைக்கழகம் சார்பில் அந்த மாணவியிடம் மன்னிப்புக் கோரினேன். தைரியமாக அவரின் கல்வியைத் தொடருமாறும் கேட்டுக் கொண்டேன்" எனவும் உபவேந்தர் ரமீஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை எனும் முடிவில் குறித்த மாணவி உள்ளார் என அறிய முடிகிறது.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவியுடன் பேசுவதற்காக அவரின் தொலைபேசி இலக்கத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது அந்த அழைப்புக்குப் பதிலளித்த மாணவியின் தந்தை, இந்த விவகாரம் தொடர்பில் யாருடனும் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனக்கூறி, தங்கள் தரப்பு நியாயங்களைப் பேசுவதற்குக் கூட - மறுத்து விட்டார்.

பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள குறித்த விரிவுரையாளர், சில வருடங்களுக்கு முன்னரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் எனும் குற்றச்சாட்டின்பேரில், அப்போதைய உபவேந்தரால் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடரும் குற்றச்சாட்டுகள்

தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் இதற்கு முன்னரும், மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான சிரேஷ்ட விரிவுரையாளரொருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்னர், முன்னைய உபவேந்தரின் பதவிக் காலத்தில் அந்த விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது இவ்வாறிருக்க, கடந்த அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த விஜேதாஸ ராஜபக்ஷ, 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றில் ஒரு தடவை பேசும்போது; "தென்கிழககுப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல், சில பாடங்களில் தேர்ச்சியடைய முடியாது" என்று, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அப்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம், அமைச்சரின் அந்தக் குற்றச்சாட்டுக் குறித்து அப்போது பிபிசி தமிழ் கருத்துக் கேட்டபோது; அது அமைச்சர் சொன்ன விடயம், அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது" எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 5500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 80 வீதமானோர் பெண்களாவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவள்ளூரில் இடி-மின்னலுடன் கூடிய மழை: வானிலை எச்சரிக்கை