சௌதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி ஒருவரின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு அவமானப்படுத்துமாறு முதன்முறையாக ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு பெண்ணை ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இகழ்ந்ததற்காக யாசர் அல்-அராவி என்பவர், மதீனா குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு எட்டு மாத சிறை தண்டையும் 1,330 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
சௌதி அரேபியாவில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, குற்றவாளிகளின் பெயர் மற்றும் தண்டனை விவரங்களை உள்ளூர் நாளிதழ்களில் அவர்களுடைய செலவிலேயே வெளியிடலாம்.
"குற்றத்தின் தீவிரம் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம்" ஆகியவை அத்தகைய நடவடிக்கைகளுக்கு அவசியமளிக்கிறதா என்பதை நீதிபதிகள் தீர்மானிக்கவேண்டும்.
அந்த நேரத்தில், மன்னராட்சியின் கீழ் இருக்கும் பழைமைவாத வளைகுடா நாடான இருந்த பலராலும் இந்தத் திருத்தம் வரவேற்கப்பட்டது. ஒரு விமர்சகர் இந்தத் திருத்தம் "நீண்டகாலம் நிறைவேற்றப்படாமல்" இருந்தது என்று குறிப்பிட்டார்.
2018-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த சட்டம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை மற்றும் 27,000 டாலர்கள் வரை அபராதம் ஏற்கெனவே விதித்தது. அதுவே தொடர்ந்து தவறு செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 80,000 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
இந்த சட்ட நடவடிக்கைகள் இருந்தபோதிலும், துன்புறுத்தலைத் தடுக்க அதிகாரிகள் இன்னும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சில சௌதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றங்களை ஆவணப்படுத்தும் விதமாக வெளியாகும் காணொளிகளில் வெளியிடப்படும் கருத்துகள் பெரும்பாலும் துன்புறுத்தலுக்கு உள்ளானகு பெண்களையே குற்றம் சாட்டுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களே தண்டிக்கபட வாய்ப்புள்ளது என்றும் ஒரு சௌதி அரேபியப் பெண் பிபிசியிடம் சமீபத்தில் கூறினார்.