Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஸ்டர் 360 டிகிரி: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைத்த 'பொக்கிஷம்' சூர்யகுமார் யாதவ்

Srilanka
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (21:03 IST)
இலங்கைக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் மேதைகளும் கூட சூர்யகுமாரின் ஆட்டத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.  
 
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சூர்யகுமார் தான் இன்றைய பேசுபடுபொருள். எங்கு பார்த்தாலும் அவரது புகைப்படங்களும், புகழுரைகளுமாகவே காணக் கிடைக்கிறது. சமூக ஊடகங்களில் சூர்யகுமாரின் பெயர் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. 
 
இன்று கிரிக்கெட் உலகமே கொண்டாடும் சூர்யகுமார் இளம் வயதிலேயே சிறந்த வீரராக அடையாளம் காணப்பட்டாலும் மிகத் தாமதமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.
 
சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்திறன் மூலமாக இளம் வயதிலேயே ரஞ்சிக் கோப்பைக்கான மும்பை அணியில் இடம் பிடித்தார். டெல்லிக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே 73 ரன் எடுத்து அசத்தினார். அந்த போட்டியில் மும்பை அணியின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஒரே வீரர் சூர்யகுமார்தான். அது முதல் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராகிப் போனார். 
 
ரஞ்சி கிரிக்கெட்டிலேயே 80 ரன்னுக்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த சூர்யகுமாரை 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. எனினும், 2012-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடாத சூர்யகுமாரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. 
 
2014-ம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட சூர்யகுமார், அந்த அணிக்காக சில சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார்.  பேட்டிங் வரிசையில் கடைசியில் இறக்கப்பட்ட அவருக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு கிட்டவில்லை. 
 
2018-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பிய பிறகுதான் சூர்யகுமாருக்கு பொற்காலம் தொடங்கியது. அது முதல் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் தான். 
 
2018 ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் ஆடிய சூர்யகுமார் அதிரடியாக 512 ரன் குவித்தார். அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரன் சேர்த்த வீரர் அவர்தான்.
 
2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதுகெலும்பாக சூர்யகுமார் திகழ்ந்தார். ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து முத்திரை பதித்த அவர் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். 
 
உலகமே உற்றுநோக்கிய ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடம்பிடித்த காலம் அது. ஆனால், மும்பை அணிக்காக 3 ஐ.பி.எல். தொடர்களில்  தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி அதிக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக இருந்தாலும் சூர்யகுமாருக்கு அது எளிதில் வாய்க்கவில்லை. 
 
சூர்யகுமாருக்கு மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் கதவுகள் இன்றும் திறக்காதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த போதுதான், ஒருவழியாக 2021-ம் ஆண்டு மார்ச்சில் இங்கிலாந்து எதிரான டி20 தொடரின் இரண்டாவது ஆட்டத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 30-வது வயதில் அவர் தடம் பதித்தார். 
 
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் பேட்ஸ்மேனாக சாதிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாள் எதிர்பார்த்து, இந்திய அணியில் இடம் பிடித்த முதல் போட்டியிலேயே பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு கிட்டாத நிலையிலேயே இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் சூர்யகுமாருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. 
 
அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைய, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான அணியில் மீண்டும் அவர் இடம் பிடித்தார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும், களம் கண்ட சூர்யகுமார் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 
 
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஆடும் முதல் இன்னிங்ஸா இது? என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் வியக்கும் வகையில் அவரது ஆட்டம் அமைந்தது. ஐ.பி.எல். தொடரில் காட்டிய அதிரடியை அப்படியே சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ந்தார் சூர்யகுமார். எதிரணி வீரர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த அவர், 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 57 ரன்களைக் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தமது வருகையை பறைசாற்றினார். 
 
சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி
பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV
பேட்ஸ்மேனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதித்துக் காட்டிய சூர்யகுமாருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அது முதல் ஏறுமுகம்தான். அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவர் பேட்டில் பட்ட பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாக பறந்தன. பேட்டிங்கில் மிக முக்கியமான 4-வது வரிசை பேட்ஸ்மேனாக அவரே நிரந்தரமாகிப் போனார். 
 
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் முதல் சதம், அவர் அறிமுகமான அதே இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் வந்தது. அதுவும் அவர்களது சொந்த மண்ணில். 
 
கடந்த ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த சூர்யகுமார் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 117 ரன்களை குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.72ஆக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சிக்ஸர், பவுண்டரிகளாக மட்டுமே 92 ரன்கள் வந்தன. 
 
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தையும் வெளிநாட்டு மண்ணிலேயே விளாசி சாதித்தார் சூர்யகுமார். கடந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்களை சேர்த்து கிரிக்கெட் ரசிகர்களின் புருவங்களை உயரச் செய்தார். ஸ்ட்ரைக் ரேட் முந்தைய சதத்தைக் காட்டிலும் அதிகம். அதாவது, 217.64. மொத்தம் 7 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை அவர் அடித்திருந்தார். 
 
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வெல்லக் காரணமாக சூர்யகுமாரின் நேற்றைய(சனிக்கிழமை) இன்னிங்ஸ் அவருக்கு மூன்றாவது சதமாக அமைந்தது. வெறும் 51 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை விளாசி 112 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது சதத்தை வெறும் 43-வது இன்னிங்சிலேயே எட்டியுள்ளார் சூர்யகுமார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் மூன்றாவது சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். 
 
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் இவர்தான். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். 
 
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 843 பந்துகளில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ், அதிவிரைவில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
 
இதுவரை 45 போட்டிகளில் 43-ல் பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ள அவர் 1,578 ரன்களைக் குவித்துள்ளார். 9  போட்டிகளில் அவர் நாட்அவுட். 46.41 ரன் சராசரியைக் கொண்டுள்ள அவரது ஸ்ட்ரைக் ரேட் 180.34.  அதிரடியாக 3 சதங்களையும், 13 அரைசதங்களையும் கண்டுள்ள சூர்யகுமார் 142 பவுண்டரிகள், 92 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 
 
இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கென்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக இயந்திரம் போன்று, களம் கண்டதும் எதிர்கொள்ளும் முதல் பந்தில் இருந்தே ரன்களை குவிக்கத் தொடங்கி விடுவது சூர்யகுமாரின் ஸ்டைல். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை விரட்டியடிக்கும் அவரது ஆட்டத்தைக் காண கண் கோடி வேண்டும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களும், ரசிகர்களும் கூறுவது வாடிக்கை. 
 
கிரிக்கெட்டில் அதிரடிக்கு புதிய இலக்கணம் வகுத்து, மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் தென் ஆப்ரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸைப் போல ஆடுவதாக வர்ணிக்கப்படுபவர் சூர்யகுமார். ஏ.பி.டிவில்லியர்சைப் போலவே மைதானத்தில் 360 டிகிரிக்கு சுழன்று, பந்துகளை விரட்டியடிக்கும் சூர்யகுமாருக்கு இந்தியாவின் ஏ.பி.டி. என்ற செல்லப் பெயரும் உண்டு. 
 
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமாருக்கு அதற்கேற்ற பெருமையும் கூடி வந்தது. கடந்த நவம்பர் மாதம் ஐ.சி.சி.வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் முதன் முறையாக சூர்யகுமார் முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக, முடிசூடா ராஜாவாக வலம் வரும் அவர், நம்பர் ஒன் அரியணையில் அன்று முதல் இன்று வரை தொடர்கிறார். 
 
இந்திய அணியில் தாமதமாக இடம் பிடித்தாலும், இன்று கிரிக்கெட் உலகமே கொண்டாடும் பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ள சூர்யகுமாருக்கு இருபது ஓவர் மட்டுமின்றி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் ஆகியவற்றிலும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கவுதம் கம்பீர், இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமாரை சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். 
 
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை கொண்டாடும் வேளையில், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் இயன் பிஷப் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யகுமார் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 
6 ஆண்டுகளுக்கு முன்பே சூர்யகுமார் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையைத் தூண்டுகிறது அவரது ட்வீட். 
 
 
பிஷப்பின் ட்வீட், "சூர்யகுமாருக்கு இந்திய அணியில் தாமதமாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டது" என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பொதிந்திருந்த ஆதங்கத்தை மீண்டும் கிளறிவிட்டுள்ளது.  டி20 போட்டிகளைப் போல அல்லாமல், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமாருக்கு விரைந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்களும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 
 
டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டி, அதன் மீதான ரசிகர்களின் பார்வையையே மாற்றியமைத்த இந்திய வீரர் வீரேந்திர சேவாக் போல சூர்யகுமாரும் மிகச்சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு