இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மூன்று வெவ்வேறு வழக்குகளில் சுமத்தியுள்ளார் அந்நாட்டின் அரசு தலைமை வழக்குரைஞர்.
நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெதன்யாகு பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கில் சார்புடன் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, இது திட்டமிடப்பட்ட சதி என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.
இந்த குற்றச்சாட்டுகளை முதலாக கொண்டு, தான் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று கூறிய அவர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி ஒன்றில், அதிகாரிகள் 'விசாரணையில் உண்மை தேடாமல், என் மீது பழியை சுமத்த பார்க்கிறார்கள்' என்று கூறியதுடன், இஸ்ரேல் மக்கள் 'விசாரணை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும்' என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய இஸ்ரேல் அரசின் தலைமை வழக்குரைஞர் அவிச்சாய் மண்டெல்பிட், தான் "கனமான இதயத்துடன்" இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இதன் மூலம், இஸ்ரேலில் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது வெளிப்படுவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.