Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் - காசா இடையே கடுமையான மோதல்; பிறகு போர் நிறுத்தம்

இஸ்ரேல் - காசா இடையே கடுமையான மோதல்; பிறகு போர் நிறுத்தம்
, வியாழன், 14 நவம்பர் 2019 (21:56 IST)
இஸ்ரேலின் வான் தாக்குதலில் பாலத்தீனை சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் (பிஐஜே) அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலுக்கும், அந்த அமைப்புக்கும் இடையே இரண்டாவது நாளாக எல்லை தாண்டிய வன்முறை நீடித்த நிலையில், தற்போது போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தகவலை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 
நேற்று நள்ளிரவு சிறிது நேரம் அமைதி நிலவிய நிலையில், எதிர்பாராத சமயத்தில் பாலத்தீனத்தை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதுடன், பிஐஜே நிலைகளின் மீது விமான தாக்குதல்களையும் நடத்தியது.
 
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்ததாக காசாவிலுள்ள ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அதேவேளையில், பாலத்தீனத்தின் தாக்குதலில் காயமடைந்த 63 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போர்நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை புதன்கிழமை பிற்பகுதியில், பாலத்தீனியன் இஸ்லாமிய ஜிஹாத் (பிஐஜே) வழங்கிய நிலையில், தற்போது அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு அது நடைமுறைக்கு வந்துள்ளதாக பிஐஜே பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
 
தாக்குதலுக்கான காரணம் என்ன?
 
கடந்த 12ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பாலத்தீனியன் இஸ்லாமிக் ஜிஹாத் (பிஐஜே) அமைப்பின் மூத்த தளபதியான அபு அல்-அட்டா காசாவிலுள்ள தனது வீட்டில் மனைவியுடன் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அவர்களது நான்கு குழந்தைகள் மற்றும் அருகாமையில் உள்ளவர்களும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேல் முழுவதும் தாக்குதல்களை நடத்துவதற்கு அபு திட்டம் தீட்டியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
 
இதைத்தொடர்ந்து இஸ்ரேலை பழிவாங்கும் நோக்கத்துடன், பிஐஜே அமைப்பு காசாவில் இருந்தவாறு, இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. செவ்வாய்க்கிழமை முதல் இதுவரையிலான காலகட்டத்தில் குறைந்தது 360 ஏவுகணைகள் காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி பிஐஜே செலுத்தியதாகவும், அவற்றில் 90% தாக்குதல்களை இடைமறித்து முறியடித்துவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதன்கிழமையன்று காசாவிலுள்ள பிஐஜேவின் நிலைகளை குறிவைத்து தாங்கள் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில், பிஐஜே பயன்படுத்தும் ஏவுகணை தொழிற்சாலை உள்பட பல பகுதிகள் சேதமடைந்ததாகவும், மேலும் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
 
தற்போதைய சண்டையின் உச்சமாக, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தலைமையிலான அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
 
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐநாவின் பிரதிநிதி நிக்கோலே மிலடெனோவ் தெரிவித்துள்ளார்.
 
அபு அல்-அட்டா
முன்னதாக, காசா நகரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கம் இந்த சண்டையில் இணைவது குறித்து எவ்வித சமிக்ஞையும் இல்லை என்றும், அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இது பேரழிவை ஏற்படுத்தும் சண்டையாக உருவெடுக்கும் என்றும் பிபிசியின் செய்தியாளர் பார்பரா பிளெட் தெரிவித்திருந்தார்.
 
அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே, இஸ்ரேல் ஹமாஸை விடுத்து, பிஐஜேவை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
காசாவில் இருந்து இஸ்ரேல் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலுக்கும் ஹமாஸ் அமைப்பை குற்றம்சாட்டுவதையே வழக்கமாக கொண்ட இஸ்ரேல், முதல் முறையாக தற்போது பிஐஜேவை குறிவைத்துள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
 
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலிய காட்டுத் தீயை அணைக்கப் போராடும் கர்ப்பிணி பெண்