அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம்: சென்னை திரும்பிய முதல்வர் பழனிச்சாமி பேட்டி

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (06:52 IST)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றபோது அதிகபட்சமாக ஆறு மாதங்கள் பதவியில் இருப்பார், முக ஸ்டாலின் இவரது ஆட்சியை எப்படியும் கவிழ்த்துவிடுவார். விரைவில் தமிழகத்திற்கு தேர்தல் வரும் என்றே அரசியல் வல்லுனர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் அனைவரின் கணிப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதோடு, முழு ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன
 
 
இந்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா கூட செய்யாத அரசுமுறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள தொழிலதிபர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
 
 
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி தனது அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை சென்னை திரும்பிய முதல்வர் பழனிச்சாமி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிற்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். நீர்மேலாண்மைக்காக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்தார்.


சுற்றுப்பயணம் குறித்து எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு, தான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மு.க. ஸ்டாலின் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி: வளர்மதி