Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ICC கூட்டம்: IPL கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடக்கும்? ஐசிசி கூட்டத்தின் முக்கிய முடிவுகள் என்ன?

ICC கூட்டம்: IPL கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடக்கும்? ஐசிசி கூட்டத்தின் முக்கிய முடிவுகள் என்ன?
, புதன், 10 ஜூன் 2020 (15:16 IST)
கொரோனா வைரஸ் தொற்றால் உலகின் பல நாடுகளிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முக்கிய கூட்டம் இன்று (மார்ச் 10) நடைபெறவுள்ளது.

இந்திய / இலங்கை நேரப்படி இன்று மாலை இக்கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடக்கவிருந்த இந்த கூட்டம், ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மிகவும் முக்கியமான தருணத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் இந்த கூட்டத்தில், டி20 உலகக் கோப்பை போட்டி தொடர், எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்த செயல்திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்படலாம்.

ஐபிஎல் போட்டிகள் எப்போது நடத்தப்படும்?

இருதரப்பு போட்டிகள் உள்ளிட்ட எண்ணற்ற கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் தொடர் என அனைத்து வகை போட்டிகளும் இக்காலகட்டத்தில் நடத்தப்படவில்லை. இது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஆரம்பத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது மிகவும் சிரமம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
webdunia

அதேவேளையில், 2009-ஆம் ஆண்டில், இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், அந்தாண்டு நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. ஆனால் தற்போதைய நிலையில் உலகெங்கும் கொரோனா பாதிப்பு நிலவுவதால் வேறு நாடுகளிலும் தற்போது ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

எனவே ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த இறுதி முடிவு இன்றைய கூட்டத்தில் வெளிவருமா என்று தெரியவில்லை.

அதேவேளையில் மற்ற கிரிக்கெட் தொடர்களை நடத்துவது, அது தொடர்பான செயல்திட்டம் குறித்த விவரங்கள் இன்று நடக்கவுள்ள கூட்டத்தின் முடிவில் வெளிவரலாம்.
இன்றைய ஐசிசி கூட்டத்தில், கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் நிலையில், வீரர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் போட்டியை எப்படி நடத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 9-ஆம் தேதி) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி மான்செஸ்டர் வந்தடைந்தனர்.

அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வாரியம் வெளியிட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப மாற்று வீரர்களின் பட்டியலையும் அவ்வணி வெளியிட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 3 டெஸ்ட்கள் அடங்கிய கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

உலக அளவில் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்பாக பல நாடுகளிலும் முடக்கநிலை அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்திற்கு பிறகு நடக்கவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
webdunia

மேலும், வரும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் எப்போது நடக்கும், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுமா என்பது போன்ற முடிவுகள் ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்படும்.

அடுத்த ஐசிசி தலைவர் யார்?

கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவது தவிர மற்றொரு முக்கிய விஷயமும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். ஐசிசி தலைவராக தற்போதுள்ள இந்தியாவின் சஷாங்க் மனோகரின் பதவிகாலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.

மீண்டும் இந்த பதவியில் தொடர சஷாங்க் மனோகர் விருப்பம் தெரிவிக்கவில்லை.

அடுத்த ஐசிசி தலைவராக வருவது யார் என்பது குறித்து பலரின் பெயர்களும் செய்திகளில் விவாதிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரான முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலியின் பெயரும் இதில் அடிபடுகிறது. ஆனால் இது குறித்து செளரவ் கங்குலியோ, பிசிசிஐயோ எந்த கருத்தும் இதுவரை கூறவில்லை.

இந்நிலையில் அடுத்த ஐசிசி தலைவர் யார் என்ற விவாதம் ஐசிசி கூட்டத்தில் நடத்தப்படலாம்.

எச்சில் பயன்படுத்த தடை

இதனிடையே, கிரிக்கெட் பந்தை பளிச்சிட செய்ய எச்சில் பயன்படுத்த தடையை ஐசிசி நேற்று உறுதி செய்துள்ளது.
webdunia

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, முன்னாள் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டி குழு, எச்சில் பயன்பாட்டிற்கு தடை, உள்ளூர் நடுவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பரிந்துரைத்தது.

இந்நிலையில் கிரிக்கெட் பந்தை பளிச்சிட செய்ய எச்சில் பயன்படுத்த தடையை ஐசிசி அறிவித்த நிலையில், இதற்கு வேறு ஏதாவது பொருள் பயன்படுத்தப்படுமா என்று விரைவில் தெரிய வரும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணாய் பிறந்தது தவறா? நான்கே வயதான குழந்தைக்கு பாலியல் தொல்லை!