Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயினை மிஞ்சியது இந்தியா - உலக நாடுகளில் என்ன நிலவரம்?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயினை மிஞ்சியது இந்தியா - உலக நாடுகளில் என்ன நிலவரம்?
, ஞாயிறு, 7 ஜூன் 2020 (15:26 IST)
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 9,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரமாக உள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
மேலும் இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலில் படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் கிட்டதட்ட 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்த விகிதம் 1 லட்சம் பேருக்கு 87 பேராக உள்ளது.

இதுவே ஸ்பெயின் ஒரு லட்சம் பேருக்கு 515ஆகவும், பிரிட்டனில் 419 ஆகவும், இத்தாலியில் 387 ஆகவும் பாதிப்பு உள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 0.49 பேர் இறக்கின்றனர். உலக அளவில் இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு கிட்டதட்ட 5 ஆக உள்ளது. இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு லட்சம் பேரில் கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர்.

எனவே இந்தியாவில் பாதிப்பு விகிதமும், இறப்பு விகிதமும் உலகளவில் ஒப்பிடு செய்யும்போது குறைவாக உள்ளது என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
webdunia

இந்த நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை மிஞ்சிய இந்தியா தற்போது நோய்த்தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

உலக நிலவரம் என்ன?

பிரேசிலில் இதுவரை 6 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.

கொரோனா பிரச்சனையைப் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ சரியாகக் கையாளவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு இணையதளத்திலிருந்து கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்த தரவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இனிமேல் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் மட்டுமே வெளியிடப்படும். மொத்த எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளிவராது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
webdunia

வலதுசாரி தலைவரான சயீர் பொல்சனாரூ, கொரோனா தொற்றைத் தடுக்க சமூக முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து வந்தார்.

பிரான்சில் பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மற்றும் கஃபேகள் இந்த வாரம் முதல் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கஃபேகள் திறக்கப்பட்ட பிறகு முதல் வார இறுதியை பிரான்ஸ் மக்கள் உற்சாகமாகக் கழித்தனர்.

அங்குள்ள உணவகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்பட்டன.

"6 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்"

கொரோனா பெருந்தொற்று உலக பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரம் இந்த கடும் சரிவிலிருந்து மீண்டுவர 10 ஆண்டுகள் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகளவில் 6 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், ஒரு நாளுக்கு 95 ரூபாய்க்குக் குறைவான பணத்தில் வாழ்க்கையை வாழ வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனிமைப்படுத்தப்படுகிறதா வட சென்னை!? – இன்று முதல்வர் உரை!