டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதம் செய்வதாக மாநில அரசும் அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், அவரது டெல்லி வருகை அரசியல் கட்சிகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. ஆளுநர் எதற்காக டெல்லி வந்துள்ளார்? அவரது திட்டம்தான் என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதா தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய சட்ட மசோதாவை விதிகளின்களின்படி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து விட்டார் என்று அவரிடம் உறுதிப்படுத்திய பிறகு அந்த செய்தியை பிபிசி தமிழ் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும்போது அவரிடம் நேரில் தமது முடிவை அறிவிக்க ஆளுநர் திட்டமிட்டிருந்ததாக அவரது தரப்பு நம்மிடையே தெரிவித்தது.
ஆனால், இந்த விவாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்கும் ஆளுநர் தரப்புக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்ற குளறுபடி காரணமாக இரு தரப்பும் பேசிக் கொள்வதில் இடைவெளி நீடித்தது. இதனால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது.
இந்த நிலையில், டெல்லி வரும் ஆளுநர், நீட் விலக்கு மசோதா குறித்து ஆலோசிக்கவும், தனக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி பற்றி விளக்கவும் வந்துள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது பற்றி பிபிசி தமிழ் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது, ஆளுநர் ரவி இரண்டு நாட்கள் பயணமாக ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி வந்துள்ளதாகவும் இது அவரது தனிப்பட்ட பயணம் என்றும் தெரிய வந்தது. மேலும், இந்த பயணத்தின்போது தமது சொந்த வீட்டிலேயே தங்கியிருக்க ஆளுநர் விரும்பியதாகவும் பிபிசி தமிழ் அறிந்தது. டெல்லி வருகையை முடித்துக் கொண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகலில் அவர் சென்னை திரும்புவார் என்றும் தெரிகிறது.
மயிலாடுதுறையில் என்ன நடந்தது?
இந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதின மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அவர் அந்த மடத்துக்கு சென்றபோது, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஆளுநரின் வருகைக்கு எதிராக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்பட 13 கட்சிகள் மற்றும் அமைப்புகள் சேர்ந்து மயிலாடுதுறையில் கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
நீட் விலக்கு மசோதா உள்பட தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் ஆளுநர் ஈடுபாடு காட்டாமலும் முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புத் தராமல் இழுத்தடிப்பதாலும் அவர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் எழுப்பினர்.
ஆளுநரின் வாகனத்துக்கு முன்பும் பின்புமாக அவரது பாதுகாப்பு வாகனங்களின் தொடரணி சென்று கொண்டிருந்தபோது சிலர் பிளாஸ்டிக் கருப்புக் கொடியை வீசிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 73 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வெளியிட்டது.
அதில் ஆளுநரின் வாகனம் மீது கருப்புக்கொடியோ கற்களோ வீசப்படவில்லை என்றும் அவரது வாகன கான்வாய் சென்றபிறகே பிளாஸ்டிக் கொடி சாலையில் விழுந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்த முரண்பட்ட தகவல்களையும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அந்த செய்திக்குறிப்பில் மறுத்திருந்தார்.
இந்த நிலையில், ஆளுநரின் மெய்க்காப்பாளர் (ஏடிசி) பொறுப்பை கவனித்து வரும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐபிஸ் அதிகாரி விஷ்வேஷ் பி. சாஸ்திரி, காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஏப்ரல் 19ஆம் தேதி இரவு கடிதம் அனுப்பினார்.
டிஜிபிக்கு கடிதம் எழுதிய ஆளுநரின் ஏடிசி
அதில் ஆளுநரின் மயிலாடுதுறை பயணத்தின்போது அவரது பாதுகாப்பு வாகன தொடரணி எந்த ஆபத்தும் இல்லாமல் கடந்து போனாலும் கோபத்துடன் கருப்புக் கொடி காட்டியவர்களின் நோக்கம் நோக்கம், ஆளுநர் தனக்குரிய கடமையை நிறைவேற்றுவதில் இருந்து முடக்குவதே ஆகும். இப்படி செய்வது இந்திய தண்டனைச் சட்டம் 124ஆவது பிரிவின் கீழும் பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றமாகும். எனவே இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வேஷ் சாஸ்திரி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதேவேளை, தமிழ்நாட்டில் ஆளுநரரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மயிலாடுதுறையில் நடந்த சம்பவம், மிகவும் தீவிரமானது என்றும் நடந்த சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார். அதை தமது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திலேயே, ஆளுநர் வாகனம் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும்,தமிழகத்திற்கு உள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று தமது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் தனிப்பட்ட முறையிலான டெல்லி வருகையின்போது, மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அரசில் உள்ளவர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் அலுவல்பூர்வமற்ற முறையில் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்த இந்த பயணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது ஆளுநரின் தரப்பு.
ஆளுநரின் மெய்க்காப்பாளர் குறிப்பிடும் சட்டப்பிரிவு 124 என்பது என்ன?
எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால் அல்லது மற்றபடி இந்தியாவில் சட்டபூர்வமாக அமைந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அது குற்றமாக கருதப்படும்.
இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபாரதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.
இதில்,"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது.
இந்தியாவில் விடுதலை முழகத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்த சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது.