நேற்று மயிலாடுதுறை சென்ற கவர்னர் வாகனத்தை போராட்டக்காரர்கள் வழிமறித்த விவகாரத்திற்கு கார்த்திக் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று அரசு முறை பயணமாக காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் மயிலாடுதுறைக்கு பயணப்பட்டார்.
அப்போது ஆளுனர் வருகையை எதிர்த்து அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
போலீஸாரின் கெடுபிடியான பாதுகாப்பு பணிகளுக்கு மத்தியில் கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்கள், ஆளுனரின் கார் வந்தபோது அதன்மீது கருப்பு கோடியை வீச முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணாமலை கடிதம்
ஆளுனர் வாகனத்தை வழிமறித்த இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஆளுனர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி குறித்து தகுந்த விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் வாகனம் தாக்கப்பட்டவில்லை என்று கூறியுள்ள நிலையில், ஆளுனரின் மெய்க்காப்பாளர்கள் போராட்டக்காரர்கள் தாக்க வந்ததாக கூறியுள்ளனர்.
கார்த்திக் சிதம்பரம் கண்டனம்
ஆளுனர் வாகனம் மீதான இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் “கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் அது ஜனநாயக முறைப்படி இருக்க வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக கூறியது ஏற்கத்தக்கதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.