Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்

‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:26 IST)
(இன்று 13.09.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
 
இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான். கடவுள் ராமர் மீது நம்பிக்கையுள்ளவர்களை அவமதித்ததும் அந்தக் கட்சிதான் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
 
குஷிநகர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ126 கோடி செலவில் சாந்த்கபீர் நகரில் கட்டப்பட்ட சிறைச்சாலையையும் நேற்று முதல்வர் ஆதித்யநாத் திறந்து வைத்தார்.
 
அதன்பின் நிகழ்ச்சியில் பேசியவர் "இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாயாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்த தேசத்தை புண்படுத்தும் மக்களை நாம் பொறுத்துக்கொள்ளத் தேவையில்லை. நோய், ராமர்மீது பக்தியுள்ளவர்களை அவமதித்தல், மாஃபியாக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆகியவற்றைத்தான் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது."
webdunia
"ஆனால், பாஜகவோ மக்களின் ரணங்களை ஆற்றுப்படுத்தியுள்ளது, கடவுள் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டுவதற்கான வழியை பாஜக காட்டியுள்ளது."
 
 
"நோய்களைத் தவிர்த்து, வேலையின்மை, மாஃபியா ராஜ்ஜியம், ஊழல் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் அரசுகள் இந்த மாநிலத்துக்கு எதையும் செய்யவில்லை.
 
தாலிபன்களுக்கு ஆதரவான, சாதிக்கு ஆதரவான, வாரிசு அரசியலில் நம்பிக்கையுள்ளவர்களை, ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்களை இந்த மாநில மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். தேள் எங்கிருந்தாலும் அது கொட்டத்தான் செய்யும் என்பதை மறந்துவிடக்கூடாது.
 
பிரதமர் மோதி முத்தலாக் சட்டத்தை ரத்து செய்தார், ஆனால், சமாஜ்வாதிக் கட்சியின் அறிக்கையை நீங்கள் படித்தால் அவர்கள் தாலிபன்களுக்கு ஆதரவானவர்கள் எனத் தெரியும். "
 
"இந்த தேசம் முதன்முதலில் ஆங்கிலேயர்களாலும் அதன்பின் காங்கிரஸ் கட்சியாலும் கொள்ளையடிக்கப்பட்டது. கடவுள் ராமர் மீது நேருவுக்கு நம்பி்க்கையில்லை. துறவிகள் மீது இந்திரா காந்தி துப்பாக்கியால் சுட உத்தரவிட்டார். ராமர் கோயில் இருப்பதை சோனியா வேண்டாம் என்கிறார்," என பேசியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
கறி கடைக்காரர் உள்பட 2 பேருக்கு கத்திக் குத்து; போலீஸ்காரருக்கு வலைவீச்சு
 
வேலாயுதம்பாளையம் அருகே கறி கடைக்காரர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய போலீஸ்காரரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருவதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
 
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹனிஃப் (வயது 35). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். புகளூர் அருகே முருகம்பாளையத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரது மனைவி ஷகிலா பானு (35). இவர், ஹனிஃப்பிற்கு அண்ணி முறை ஆவார்.
 
இந்தநிலையில் ஷகிலா பானுவின் தங்கை ரம்ஜான் கனியின் கணவர் அலாவுதீன், ஷகிலா பானுவிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஹனிப் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
 
இந்தநிலையில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் கறி கடை நடத்தி வந்த அலாவுதீனிடம் போலீஸ்காரர் ஹனிப் சென்று ஷகிலா பானுவிடம் போனில் பேசியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
இதையடுத்து, கறிக்கடையில் இருந்த அலாவுதீனின் தந்தை அக்பர் (56), புகளூர் ஹைஸ்கூல்மேடு பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் இம்ரான்கான் (30) ஆகியோர் 2 பேரையும் சமாதானப்படுத்தினர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ஹனிப் தான் கையில் வைத்திருந்த கத்தியால் கறிக்கடைக்காரர் அக்பர் மற்றும் இம்ரான்கானை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
 
இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய போலீஸ்காரர் ஹனிப்பை வலைவீசி தேடி வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
ஆா்எஸ்எஸ் தலைவா்கள் குறித்த பாடங்கள்: சசி தரூா் ஆதரவு
 
கேரளாவில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தில் ஆா்எஸ்எஸ் முன்னாள் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா், இந்து மகாசபை தலைவா் வீர சாவா்க்கா் பற்றிய பாடங்களை சோ்ப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் ஆதரவு தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
 
கேரளத்தில் கண்ணூா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பிரென்னன் கல்லூரியில் எம்.ஏ. அரசியல் மற்றும் நிா்வாகவியல் படிப்பு உள்ளது. அதில், மூன்றாவது பருவ பாடத் திட்டத்தில் கோல்வல்கரின் 'பஞ்ச் ஆஃப் தாட்ஸ்', வீர சாவா்க்கரின் 'ஹிந்துத்துவா: ஹிந்து யாா்' நூல்கள் பாடங்களாகச் சோ்க்கப்பட்டுள்ளன.
 
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாணவா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. கண்ணூா் பல்கலைக்கழகம் காவிமயமாக்கப்படுவதாக அந்த அமைப்புகள் குற்றம்சாட்டின. முதல்வா் பினராயி விஜயனும் பாடப் பகுதி சோ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தார்.
 
சுதந்திரப் போராட்டத்தின்போது புறமுதுகு காட்டிய தலைவா்களையும் அவா்களின் சிந்தனையையும் எனது அரசு ஆதரிக்காது என்று அவா் கூறினாா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க இரு நபா் குழுவை அவா் அமைத்துள்ளாா்.
 
இந்நிலையில், புதிய பாடப் பகுதி சோ்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் கருத்து தெரிவித்துள்ளாா். அவா் தனது முகநூல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில்
 
"நமது சமூகத்தில் அறிவுசாா் சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கட்சி அரசியலுக்காக, அறிவுசாா் சுதந்திரத்தை பலியிடக் கூடாது. சிலருடைய சிந்தனைகளைப் புறக்கணிப்பதன் மூலம் அவா்களைத் தோற்கடிக்க முடியும் என்று நம்புவது மூடத்தனமான செயல்.
 
நான் எழுதியுள்ள புத்தகங்களில் எம்.எஸ்.கோல்வல்கா், சாவா்க்கரின் கருத்துகளைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். அதே நேரத்தில், அவா்களை மறுக்கவும் செய்திருக்கிறேன். வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் கல்வியில் முழு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால், இந்த நிலைப்பாட்டை என்னுடைய சில நண்பா்கள் ஏற்கவில்லை.
 
சாவா்க்கா், கோல்வல்கரைப் பற்றிப் படிக்கவில்லை என்றால் எந்த அடிப்படையில் அவா்களின் கொள்கைகளை எதிா்க்க முடியும்? கண்ணூா் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூா் பற்றியும் கற்பிக்கப்படுகிறது" என அப்பதிவில் சசி தரூா் குறிப்பிட்டுள்ளாா்.
 
முன்னதாக, 'இந்தப் பாடத் திட்டத்தை பல்கலைக்கழக கல்வி வாரியம் தோ்வு செய்யவில்லை; பிரென்னன் கல்லூரி ஆசிரியா்களைக் கொண்ட குழு அமைத்து சோ்த்துள்ளனா்; அதற்கு பல்கலைக்கழக துணைவேந்தா் ஒப்புதல் அளித்திருக்கிறாா்' என்று மாணவா் அமைப்புகள் குற்றம் சாட்டுவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!