Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருவநிலை மாற்றம்: பேரழிவுக்கு காரணம் மனிதர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?

பருவநிலை மாற்றம்: பேரழிவுக்கு காரணம் மனிதர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (15:09 IST)
பருவநிலை மாற்றம் காரணமாக நமது ஒட்டுமொத்த பூமியும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பூமி வெப்பமடைகிறது என்பதற்கு என்ன ஆதாரம்? அது மனிதர்களால்தான் ஏற்படுகிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்?

உலகம் வெப்பமடைகிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?

தொழில்துறை புரட்சி தொடங்கியதிலிருந்தே நமது பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது.

1850ஆம் ஆண்டிலிருந்து பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஒவ்வொரு தசாப்தமும் அதற்கு முந்தையதை விட அதிக வெப்பமாக இருந்திருக்கிறது.

இந்த முடிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான அளவுகளைப் ஆய்வு செய்து தருவிக்கப்பட்டவை. வெப்பநிலை அளவீடுகள் தரை, கப்பல்களில் உள்ள வானிலை நிலையங்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் மூலமாகச் சேகரிக்கப்படுகின்றன.

விஞ்ஞானிகளைக் கொண்ட பல சுயாதீனக் குழுக்கள் அனைத்தும் தொழில் புரட்சிக்குப் பிறகு உலகம் வெப்பமடைந்திருக்கிறது என்ற முடிவுக்கே வந்திருக்கின்றன.

வெப்பநிலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை இன்னும் முந்தைய காலத்தில் இருந்தே விஞ்ஞானிகளால் மீளுருவாக்கம் செய்து காட்ட முடியும்.

மர வளையங்கள், பனிக்கட்டிகள், ஏரி வண்டல்கள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற அனைத்தும் முந்தைய காலநிலையின் தடங்களைக் கொண்டிருக்கின்றன.

இவையனைத்தும் தற்போதைய வெப்பமயமாதலுக்கான காரணத்தை வழங்குகின்றன. உண்மையில் கடந்த 1,25,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு வெப்பமாக இருந்ததில்லை என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

பூமி வெப்பமடைவதற்கு மனிதர்களே காரணம் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

சூரியனின் வெப்பத்தை பூமியின் மேற்பரப்பில் அடைத்து வைக்கும் பசுமை இல்ல வாயுக்களே பூமியின் வெப்ப நிலை உயர்வுக்கும் மனித நடவடிக்கைகளுக்குமான தொடர்பு. வளிமண்டலத்தில் மிகவும் அதிகமாக இருப்பதால், கார்பன் டை ஆக்ஸைடு இவற்றுள் முக்கியமானதாகிறது.

பசுமை இல்ல வாயுக்கள் என்பதற்குப் பதிலாக, கார்பன் டை ஆக்ஸைடு சூரிய வெப்பத்தை பூமியில் தக்க வைக்கிறது என்றும் நாம் சொல்லலாம். கார்பன் டை ஆக்ஸைடு உறிஞ்சும் அளவு போக எஞ்சிய வெப்பமே பூமியில் இருந்து வெளியேறுகிறது என்று செயற்கைக்கோள்கள் காட்டுகின்றன.

புதைபடிம எரிபொருட்களை எரிப்பது மற்றும் மரங்களை வெட்டுவது போன்ற நடவடிக்கைகள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுகின்றன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இவ்விரு செயல்பாடுகளும் மிக வேகமாக அதிகரித்தன. , எனவே ஒரே நேரத்தில் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்ததில் ஆச்சரியமில்லை.

இந்த கூடுதல் கார்பன் டை ஆக்ஸைடு எங்கிருந்து வந்தது என்பதை நாம் உறுதியாகக் காட்ட ஒரு வழி இருக்கிறது. புதைபடிம எரிபொருட்களை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் கார்பன் ஒரு தனித்துவமான ரசாயன அடையாளத்தைக் கொண்டுள்ளது.

மர வளையங்கள் மற்றும் துருவ பனி ஆகிய இரண்டும் வளிமண்டல வேதியியலில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்கின்றன. இவற்றை ஆய்வு செய்யும் போது, புதைபடிம மூலங்களிலிருந்து வெளியான கார்பன் 1850 முதல் கணிசமாக உயர்ந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.

8 லட்சம் ஆண்டுகளாக, வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு ஒரு மில்லியனுக்கு 300 துகள்கள் (பிபிஎம்) என்ற அளவுக்கு மேல் உயரவில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் தொழில் புரட்சிக்குப் பின்னர், கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு 420 பிபிஎம் என்ற தற்போதைய அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

கணினி உருவகப்படுத்தும் தொழில்நுட்பம் மூலமாக பருவநிலை மாதிரிகள் உருவாக்கப்பட்டுகின்றன. இவை மனிதர்களால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் இல்லாவிட்டால் பூமியின் வெப்பநிலை எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றன.

20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில், இயற்கையான காரணிகள் மட்டுமே காலநிலையை பாதித்திருந்தால், சற்று புவி வெப்பமடைதலும் குளிர்வித்தலும் நடந்திருக்கும் என்பதை இந்த மாதிரிகள் கூறுகின்றன.

மனிதர்களால் ஏற்படும் விளைகளைச் சேர்க்கும்போது மட்டுமே இந்த மாதிரிகள் வெப்ப நிலை அதிகரிப்பதாகக் காட்டுகின்றன.

பூமியில் மனிதர்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்?

ஏற்கெனவே பூமியில் ஏற்பட்டிருக்கும் வெப்பத்தின் உயர்வு கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் தொடர்பாக, நிஜ உலகில் நடப்பதற்கும் விஞ்ஞானிகளின் கணிப்பிற்கும் பொருந்திப் போகின்றன.

கீழ்க்கண்டவை அவற்றில் அடங்கும்:
  • கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனிக்கட்டிகள் வேகமாக உருகுகின்றன.
  • வானிலை தொடர்பான பேரழிவுகளின் எண்ணிக்கை 50 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது
  • உலகளாவிய கடல் மட்டம் கடந்த நூற்றாண்டில் 20 செ.மீ உயர்ந்திருக்கிறது. இன்னும் உயர்ந்து வருகிறது.
  • 1800களில் இருந்து, பெருங்கடல்கள் சுமார் 40% அதிக அமிலத் தன்மைக்கு மாறியிருக்கிறது. அது கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது.

கடந்த காலத்தில் பூமி வெப்பமாக இல்லையா?

பூமியில் முன்னரும் பல வெப்பமான காலங்கள் இருந்தன.

உதாரணமாக, 9.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்ததால், துருவங்கள் பனியால் மூடப்படவில்லை. முதலையைப் போன்ற உயிரினங்கள் கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியம் வரை வாழ்ந்தன.

ஆனால் இதை வைத்து நாம் ஆறுதல் அடைய முடியாது. ஏனெனின் அப்போது மனிதர்கள் இல்லை. அந்தக் காலகட்டத்தில் கடல் மட்டம் இப்போது இருப்பதை விட 80 அடி அதிகமாக இருந்தது. இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமானால், 5 முதல் 8 அடி வரை கடல் நீர்மட்டம் உயர்ந்தாலே இப்போதைய உலகின் முக்கிய கடலோர நகரங்கள் அனைத்தும் மூழ்கிவிடும்.

இந்தக் காலகட்டங்களில் உயிரினங்கள் பெருமளவில் அழிந்துவிட்டன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. வெப்ப மண்டலங்கள் உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு "இறந்த மண்டலங்களாக" மாறியிருக்கலாம் என பருவநிலை மாதிரிகள் காட்டுகின்றன.

வெப்பத்திற்கும் குளிருக்கும் இடையிலான இந்த ஏற்ற இறக்கங்கள், சூரியனை நீண்ட நேரம் சுற்றி வரும்போது பூமி அதிர்வது, எரிமலை வெடிப்புகள் மற்றும் எல் நினோ போன்ற குறுகிய கால காலநிலை சுழற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் ஏற்படுகிறது.

பருவநிலை மாற்றம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்களைச் சந்தேகிக்கும் குழுக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

இருப்பினும், மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வழக்கமாக வெளியிடும் அனைத்து விஞ்ஞானிகளும் பருவநிலை மாற்றத்திற்கான தற்போதைய காரணங்களை ஒப்புக்கொள்கிறார்கள்.

வளிமண்டலம், பெருங்கடல்கள், நிலம் ஆகியவை வெப்பமடைந்ததற்கு மனிதனின் நடவடிக்கைகளே காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று 20121-இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெகாசஸ் வழக்கில் நாளை தீர்ப்பு!!