Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்: 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...'

Advertiesment
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்: 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...'
, திங்கள், 25 அக்டோபர் 2021 (16:23 IST)
''எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதற்காக தே.மு.தி.கவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்'' என தே.மு.தி. பொதுச் செயலாளர் விஜயகாந்த், அறிக்கை ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க, 60 தொகுதிகளில் களமிறங்கியது. கடைசி நேர கூட்டணி, வேட்பாளர்களின் செலவுகள் எனப் பல வகையிலும் தே.மு.தி.க சிரமத்தைச் சந்தித்தது. இதன் விளைவாக, போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் தே.மு.தி.கவால் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அக்கட்சியால் பெரியளவில் சாதிக்க முடியவில்லை.

மேலும், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலமில்லாமல் இருப்பது, முக்கிய நிர்வாகிகள் பலரும் வேறு கட்சிகளுக்குச் சென்று அடைக்கலமானது எனத் தொடர்ந்து தே.மு.தி.கவின் வளர்ச்சி பின்னோக்கிச் செல்வதாக அக்கட்சியின் நிர்வாகிகள் உணர்கின்றனர்.

இதையடுத்து, வேறு கட்சிகளுக்குச் சென்று இணைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தே.மு.தி.கவின் முக்கிய நிர்வாகிகள், தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தனர்.

இந்நிலையில், தே.மு.தி.க தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கழகம் தே.மு.தி.க என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மக்கள் நலன் கருதி ரசிகர் மன்றமாக இருந்து பின்னாளில் கழகமாக உயர்வதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கள்தான். உங்கள் அத்துணை பேரின் விருப்பத்தையும் வேண்டுதலையும் ஏற்று கடந்த 2000 ஆம் ஆண்டில் ரசிகர் மன்றத்துக்காக கொடியை அறிமுகப்படுத்தி, 2005ஆம் ஆண்டு கழகமாகவும் அரசியல் கட்சியாகவும் உங்கள் விருப்பத்துக்கிணங்க மாற்றுவது என முடிவு செய்தோம்.''

''அதன்படி, உலகம் வியக்கும் அளவுக்கு பிரமாண்ட மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி தே.மு.தி.கவை உருவாக்கினோம். இன்றைக்கு மூளைச்சலவை செய்பவர்களின் பேச்சை நம்பியும் ஆசை வார்த்தைகளைக் கூறுபவர்களை நம்பியும் கழகத்தை விட்டு நீங்கள் செல்வது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கழகத்துக்கும் செய்யும் துரோகமாகக் கருதுகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ''மாற்று அணியினர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அவர்களுடன் நீங்கள் செல்லும்போது அது உங்களை பலவீனமானவர்களாக இருப்பதை காட்டும். இதனை இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும். எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதற்காக தே.மு.தி.கவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்தான். 100 ஆண்டுகள் ஆனாலும் தே.மு.தி.கவை யாராலும் அழிக்க முடியாது. இனி வரும் காலங்களில் வளர்ச்சி பாதையை நோக்கி இணைந்து செல்வோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

விஜயகாந்த் நன்றாகப் பேச வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சைஅளித்தனர். பின்பு லண்டனைச் சேர்ந்த மருத்துவர் குழு ஒன்றும் அவருக்குப் பேச்சுப் பயிற்சியை அளித்ததாக தேமுதிக நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், அவரால் முன்பு போல பேச முடியாததால் கடந்த காலங்களில் அவர் பேசிய பேச்சுகளின் பதிவையே கட்சி நிர்வாகிகள் ஒலிபரப்பினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவை சுழற்றியடிக்கும் மழை! – 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!