கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஐந்து விதமான தோல் பிரச்சனை மற்றும் காலில் உள்ள விரல்களில் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என ஸ்பெயினில் உள்ள மருத்துவ குழு ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.
பெரும்பாலும் வயது குறைவான கொரோனா நோயாளிகளுக்கே இந்த தோல் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் பல நாட்களுக்கு இந்த பாத விரல்களில் ஏற்பட்ட ஒவ்வாமையும், தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் நீடிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சின்னம்மை தொற்று உடலில் சிறிய புண்ணை ஏற்படுத்துவது போல, வைரஸ் பாதிப்பால் தோல் பிரச்சனை ஏற்படுவது எதார்த்தம்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பால் பல விதமான தோல் பாதிப்புகள் ஏற்படுவதே மருத்துவர்களை அச்சமடைய செய்கிறது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் பட்டியலில் தோல் பாதிப்புகள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
கோவிட் கால் விரல் பாதிப்பு குறித்து பல ஆய்வு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸுக்கான வேறு சில அறிகுறிகள் இல்லாதபோதும் கால் விரலில் ஏற்படும் தோல் பாதிப்பு மூலம் கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நோயாளிகளும் உள்ளனர்.
இந்த ஆய்வில் ஈடுப்பட்ட ஆராய்ச்சியாளர் இக்னாசியோ கார்ச்சியா டோவல் கூறுகையில், ''பெரும்பாலும் கொரோனாவால் ஏற்படும் கால் விரல் பாதிப்பு மக்குலோபாபுல்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு வித தோல் பிரச்சனை. சிறியதாக, தட்டையாக சிவப்பு நிறத்தில் தோல் புடைத்து காணப்படும். இது உடலில் சில பகுதிகளில் தோன்றும். பெரும்பாலும் கால் விரல்கள் அல்லது கைகளில் இந்த பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக இந்த விரல் பாதிப்பு சுவாசப் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் தான் ஏற்படும். எனவே கால் விரல் பாதிப்பிற்கு தேவையான சிகிச்சை அளிப்பது அவ்வளவு நல்லதல்ல.
இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மடாலஜி என்ற சஞ்சிகையில் இந்த வாரம் கொரோனாவால் ஏற்படுகிற தோல் பாதிப்பு குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் இந்த வாரம் தோல் பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளின் விவரங்களையும் பெயர்ப் பட்டியலையும் வழங்கக்கோரி அங்குள்ள அனைத்து தோல் மருத்துவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அளித்த விவரங்களின்படி 375 பேர் தோல் பாதிப்புடன் மருத்துவர்களை நாடியுள்ளனர்.
5 விதமான தோல் பிரச்சனைகள்
1. கை மற்றும் பாதத்தில் சிறிய புண்கள். இந்த புண்களால் வலி மற்றும் அரிப்பும் சிலருக்கு ஏற்படும். பெரும்பாலும் வயது குறைவான கோவிட் 19 நோயாளிகளே இந்த வகையான தோல் பிரச்சனைகளுடன் வந்துள்ளனர். சுமாராக 12 நாட்களுக்கு இந்த பாதிப்பு நீடிக்கிறது. லேசான தொற்றுள்ளவர்களுக்கு இது வருகிறு. 19% நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது.
2. கை, கால்களில் சிறிய கொப்புளங்களுடனும் அவ்வப்போது அரிப்பு ஏற்பட்டும் சிலர் வந்துள்ளனர். நடுத்தர வயதுடைய சிலர் 10 நாட்களாக இந்த வகையான கொப்புளங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் ஏற்படும் முன்பே கொப்புளங்கள் தோன்றியுள்ளது. 9% சதவீதம் பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
3. தொட்டால் எரிச்சலூட்டுகிற அரிப்பு, பெரும்பாலும் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் தோல் பாதிப்பு. பெரும்பாலும் உள்ளங்கை அல்லது உடலின் பிற பகுதிகளில் இந்த வகை தோல் பாதிப்பு ஏற்படுகிறது.
4. மக்குலோபாபுலெஸ் - சிறிய, தட்டையான மற்றும் சிவப்பு நிறத்தில் தோல் தண்டிப்பாக தோன்றும். 47% பேருக்கு இந்த வகையான தோல் பாதிப்பே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கான மற்ற அறிகுறிகள் தோன்றிய அதே நேரத்தில் இந்த தோல் பாதிப்பும் இருந்ததாக நோயாளிகள் குறிப்பிடுகின்றனர். இந்த வகையான தோல் பிரச்சனைகள் 7 நாட்களுக்கு நீடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நெக்ரோசிஸ் என்று அழைக்கப்படும் லிவிடோ என்ற நோய் பாதிப்பு 6 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோலில் சிவப்பு அல்லது நீல நிறத்தில் வலை வலையாக தோற்றம் ஏற்படும். மோசமான இரத்த ஓட்டத்திற்கான அறிகுறியாக இந்த தோல் பாதிப்பு கருதப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பு உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளுக்கே இந்த வகையான தோல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல விதமான தோல் பாதிப்புகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் விளக்கி கூறினாலும், உண்மையில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொரோனாவிற்கான அறிகுறியா என்பதை மருத்துவர்களே கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும்.
மக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய தோல் பாதிப்புகளை தாங்களே கண்டறிந்து தீர்வு காணுவதை நோக்கமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படவில்லை.
மாறாக கொரோனா பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்களையும் அதன் தீவிர தன்மையையும் மக்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என பிரிட்டன் மருத்துவர் ரூத் முற்ஃபி தெரிவித்தார்.
நிமோனியா போன்ற நோய் பாதிப்புகளின்போதும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு தான் என சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக தலைவர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் தோல் அரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை. ஏன் சிலருக்கு மட்டும் தோல் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தோல் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்வி நிறுவனமும், எத்தனை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தோல் பாதிப்புகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை விவரங்களை சேகரித்து வருகிறது.