கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட கண்ணாடி திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுக்காப்பாக உணர செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான். அர்ஜென்டினா தனது விமான போக்குவரத்தை செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முறை விடுமுறை நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இனி வெளிநாடு பயணம் மேற்கொண்டால், நாம் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் ?
விமான நிலையங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் ?
அமெரிக்காவில் விமான நிலைய சோதனைக்கு உட்படுத்தப்படும் முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை விமான நிலையத்திலேயே கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவும் 20 வினாடிகளுக்கு கை கழுவுவது அவசியம் என்றும் அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உலகில் உள்ள பல விமான நிலையங்களில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்திவுள்ளனர். விமான நிலையம் முழுவதும் ஹான்ட் சேனிட்டைசர்கள் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.
ஹாங் காங் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடலையும் கிருமிநாசினி சாதனத்தால் சுத்தம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதாவது உடலின் தோல் மற்றும் ஆடை மீது உள்ள கிருமிகளை குழுவதும் அகற்ற புதிய கருவிகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் ஒருவரின் ஆடை மற்றும் அவரின் தோல் மீது உள்ள கிருமியை ஒழிக்க 40 வினாடிகள் மட்டுமே ஆகும், அவ்வாறு இந்த நடைமுறையை பின்பற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.