Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செங்கல்பட்டு இரட்டைக் கொலையைத் தொடர்ந்து 2 என்கவுன்டர்கள் - நடந்தது என்ன?

Advertiesment
செங்கல்பட்டு இரட்டைக் கொலையைத் தொடர்ந்து 2 என்கவுன்டர்கள் - நடந்தது என்ன?
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (13:45 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரட்டைப் படுகொலையைத் தொடர்ந்து இரண்டு பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு நகரில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு 6 ஆம் தேதி மாலை அப்பு கார்த்திக் என்ற நபர் வந்துள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கார்த்திக் உயிரிழந்தார். இதனையடுத்து, மேட்டுத் தெருவில் உள்ள சீனிவாசன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த அந்தக் கும்பல் அங்கே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் என்பவரையும் வெட்டிக் கொன்றனர். ஒரே நேரத்தில் நடந்த இந்த இரட்டைப் படுகொலை சம்பவம் செங்கல்பட்டு நகரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்நிலைய போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்ட விதமும் காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்பேரின் ஏ.எஸ்.பி ஆசிஷ் பச்சாரா தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் வடிவேல் முருகன், ரவிக்குமார் உள்பட ஐந்து ஆய்வாளர்கள் இணைக்கப்பட்டனர்.

இந்தக் குழுவினர் படுகொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர். முடிவில், இன்று அதிகாலை உத்தரமேரூர் அருகே மொய்தீன், தினேஷ், மாதவன், ஜெசிகா என்ற பெண்மணி என நான்கு பேரை கைது செய்தனர். இவர்களை செங்கல்பட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது பாலாறு பாலம் அருகே உள்ள இருங்குன்றப்பள்ளி மலை அருகே வந்தபோது, காவல்துறை மீது கைது செய்யப்பட்டவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முடிவில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தினேஷ், மொய்தீன் ஆகியோரை என்கவுன்டர் செய்ததாகவும் கூறுகின்றனர். இந்தச் சம்பவத்தில் மாதவன், ஜெசிகா ஆகியோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தால் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட மொய்தீன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகவும் தினேஷ் மீது கொலை உள்பட 4 வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது. இதையடுத்து, என்கவுன்டர் சம்பவம் நடந்த இடத்தில் ஐ.ஜி சந்தோஷ்குமார், டி.ஐ.ஜி சத்தியபிரியா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியாததால், சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, ``படுகொலை சம்பவத்தின் பின்னணியில் பெண் ஒருவர் தொடர்பான பிரச்னை உள்ளதாகக் கூறுகின்றனர். இதுதொடர்பாக, என்கவுன்டரில் உயிரிழந்த தினேஷ் என்பவருக்கும் நேற்று மாலை கொல்லப்பட்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தினேஷின் காலை கார்த்தியும் மகேஷும் வெட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகு தினேஷால் இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடியாமல் போய்விட்டது. தொடர்ந்து கண் பார்வையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னால் செயல்பட முடியாமல் போனதற்கு இவர்கள் இரண்டு பேர்தான் காரணம் என்ற நோக்கில் நேற்று மாலை அவர்களை இந்தக் கும்பல் படுகொலை செய்தது.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கார்த்திக் என்பவர் செங்கல்பட்டு தி.மு.க பிரமுகர் ரவிப்பிரகாஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

செங்கல்பட்டு நகரத்தில் இரட்டைக் கொலை நடந்த 12 மணிநேரத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். அவர்கள் எங்களைத் தாக்க முற்பட்டதால் பதிலுக்கு சுட வேண்டி வந்தது," என தெரிவித்தனர். மேலும், பத்து வருடங்களுக்குப் பிறகு செங்கல்பட்டில் என்கவுன்டர் நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது? எஸ்.பி அரவிந்தன் விளக்கம்

என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன், `` நேற்று மாலை அப்பு கார்த்திக், மகேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டும் இன்னொருவர் அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் ஜெசிகா, மாதவன் என இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.

மற்ற இருவரான தினேஷ், மொய்தீன் ஆகியோரை கைது செய்வதற்கு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் இங்கு வந்தபோது, அவர்கள் இருவரும் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். இறந்துபோன மொய்தீன் மீது 2020 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு உள்பட 3 வழக்குகள் உள்ளன. தினேஷ் மீதும் 3 வழக்குகள் உள்ளன'' என்றார்.

தொடர்ந்து பேசுகையில், `` கொலையில் தொடர்புடைய நபர்கள் இங்கு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இங்கு போலீஸார் வந்தபோது, அவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதில் ஒன்று வெடிக்கவில்லை. இன்னொன்று வெடித்தது. தொடர்ந்து அரிவாளால் வெட்டினர். அதன்பிறகும் அவர்கள் சரணடையாததால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியது வந்தது'' என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னடா எச்சில் துப்பி ஸ்டைல் பண்ணி விடுற..! – சிகையலங்கார நிபுணர் மீது வழக்கு!