Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரேந்திர மோதி, அமித் ஷா: 'என் கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன' - சத்யபால் மாலிக்

Advertiesment
BBC Tamil. Narendra Modi
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:50 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அமித் ஷா தம்மிடம் கூறியதாக தாம் சொன்ன கருத்துகள் ''தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் பேசிய சத்யபால் மாலிக், என்னிடம் பேசியபோது பிரதமர் குறித்து அமித் ஷா எந்தத் தவறான கருத்தையும் வெளியிடவில்லை; வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக மக்களைத் தொடர்ந்து சந்திக்கவும், அவர்கள் மனதை மாற்றவும் முயற்சி செய்ய வேண்டும் என்று மட்டுமே என்னிடம் கூறினார்,'' என தெரிவித்துள்ளார்.

''ஏன் தொடர்ந்து ஏதாவது கருத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று அமித் ஷா என்னைக் கேட்டார். விவசாயிகள் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினேன். அவர் புரிந்துகொண்டார். பிரதமர் குறித்து எதுவும் அமித்ஷா கருத்து சொல்லவில்லை. மக்களை தொடர்ந்து சந்தித்துப் பேசத்தான் சொன்னார்,'' என்று என்டிடிவி பேட்டியிலும் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

பிகார், பிரிக்கப்படாத ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கோவா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பதவி வகிப்பதற்கு முன்பு உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர் சத்யபால் மாலிக்.

சத்யபால் மாலிக் ஆளுநர் பதவியில் இருந்த போதும், இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது தொடர்ந்து அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

ஆனால் அவர் ஞாயிறன்று ஹரியாணா மாநிலத்தில் பேசிய ஒரு காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

சத்யபால் மாலிக் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்துப் பேசியது தொடர்பாக ஹரியாணா மாநிலம் சர்க்கி தாத்ரியில் நடைபெற்ற கூட்டத்தில் விவரித்ததை அந்தக் காணொளி காட்டுகிறது.

அப்போது, ''பிரதமர் மோதியைத் தாம் சந்தித்தபோது மிகவும் திமிருடன் நடந்துகொண்டார்'' என்று கூறினார் மாலிக்.

''நான் அவரிடம் நம் விவசாயிகள் 500 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று சொன்னபோது, 'அவர்கள் என்ன எனக்காகவா இறந்தார்கள்?' என்று கேட்டார் மோதி. அதற்கு நான், 'நீங்கள்தானே மன்னர்' எனக் கூறி அவருடன் வாக்குவாதம் செய்தேன். பிறகு இந்த விவகாரம் பற்றி அமித் ஷாவிடம் பேசுமாறு கூறினார் நரேந்திர மோதி. அமித் ஷாவிடம் மோதியின் பேச்சு பற்றி நான் குறிப்பிட்டபோது, 'நரேந்திர மோதியை தவறானவர்கள் வழிநடத்துகிறார்கள். அவர் ஏதோ பேசி விட்டார் விடுங்கள்' என்று தெரிவித்தார்,'' என்றார் சத்யபால் மாலிக்.

சத்யபால் மாலிக்கின் கருத்துகள் ஊடகங்களில் வெளியான பின்பு எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றின.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே சத்யபால் மாறி பேசிய காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோதியையும் டேக் செய்திருந்தார்.

''விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோதி திமிர்த்தனமாக நடந்து கொண்டார் என்று மேகாலயா ஆளுநர் திரு. சத்யபால் மாலிக் கூறியுள்ளார். 'பிரதமர் மூர்க்கத்தனமானவர்' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் இவ்வளவு மரியாதை குறைவாகப் பேசுகிறார்கள். நரேந்திர மோதிஜி இது உண்மையா?'' என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே அமித் ஷா தம்மிடம் அப்படி எதையும் கூறவில்லை என்று மறுத்துள்ளார் சத்யபால் மாலிக். ஆனால் நரேந்திர மோதி குறித்து தாம் தெரிவித்த கருத்துகள் பற்றி அவர் எதையும் கூறவில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்ற பிரதமர் நரேந்திர மோதியின் நடவடிக்கையை பாராட்டிய சத்யபால் மாலிக், ''முதலமைச்சராக இருந்தபொழுது நரேந்திர மோதி விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்; ஆனால் பிரதமர் ஆன பின்பு அவர் தவறாக வழிநடத்தப்பட்டார். விவசாயிகள் புதிய சட்டங்களை ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின், அவற்றை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்கும் மனம் நரேந்திர மோதிக்கு இருந்தது. அவர் பெரிய மனம் படைத்தவர் என்பதையே இது காட்டுகிறது,'' என்று சத்யபால் மாலிக் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்தை நிறுத்தாததால் குதித்த மாணவி பலி! – ஓட்டுனர், நடத்துனர் கைது!