இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.
தாய் மொழி விஷயத்தில் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வியை புதிய கல்விக் கொள்கை பின்பற்றுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சா்வதேச ஹிந்தி பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
''மகாத்மா காந்தியைப் பொருத்தவரை மொழி என்பது தேசிய ஒற்றுமை. ஒவ்வொரு மனிதரும் அவரது தாய்மொழி மீது கொண்ட உணர்வை மகாத்மா காந்தி புரிந்து கொண்டார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அதனை சுதந்திரத்துடன் அவா் இணைத்துக் கொண்டார்.
தாய்மொழியைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக வைப்பதுடன், மாணவா்களுக்கு கட்டாய இலவசக் கல்வி மற்றும் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கல்வி என்ற பெயரில் வாா்தாவில் 1937-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி முன்வைத்தார்.''
தாய்மொழி விஷயத்தில் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வியை புதிய கல்விக் கொள்கை பின்பற்றுகிறது என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு கூறினார்.
தமிழ்நாடு சிறைகளில் கொரோனா கட்டுப்பாடுகள்
சிறைகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க கூடுதல்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது என இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் தனி அறைகளில் அடைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாலியல் வல்லுறவு முயற்சி - தலைமைக் காவலர் கைது
ஈரோட்டில் ரெயில்வே பெண் போலீசை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரோடு பழைய ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). தலைமைக் காவலரான இவர் சேலம் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஈரோட்டில் ரெயில்வே போலீசாக பணி புரிந்து வருகிறார். அப்போது ஈரோட்டில் வசிக்கும் 29 வயதான ஒரு பெண் போலீசுடன் செல்வன் நட்புடன் பழகி வந்து உள்ளார்.
அந்தப் பெண் போலீசை, அவரது வீட்டுக்குச் சென்று பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.