எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருப்பவர் செங்கோட்டையன். பலமுறை அமைச்சராக இருந்துள்ளார். ஜெயலலிதா மரணமடைந்தபோது அடுத்த முதல்வர் யார்? என்ற லிஸ்ட்டில் செங்கோட்டையன் பெயர் இருந்தது. அதேபோல கூவத்தூரில் சசிகலா தலைமையில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் போது அந்த பட்டியலிலும் செங்கோட்டையன் இருந்தார். ஆனால், முதல்வர் பதவி பழனிச்சாமிக்கு சென்றது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதும் அவருக்கு கீழ் செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன். அதே நேரம் கட்சி, ஆட்சி என இரண்டையும் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிவிட்டதால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட துவங்கினார். ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை ஒன்றிணைத்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என பேச துவங்கினார். இதன் காரணமாக அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
.
அதிமுகவை ஒருங்கிணைக்க சொன்னது பாஜகதான் என வெளிப்படையாக செய்தியாளர்களிடம் சொன்னார் செங்கோட்டையன். ஆனால் பாஜகவினர் இதற்கு ரியாக்ட் செய்யவில்லை. இதுபற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு மற்ற கட்சியின் உள் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை என கூறினார்.
அதிமுகவின் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டபின் செங்கோட்டையனை பாஜக கண்டு கொள்ளவில்லையாம். பாஜக தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்கிற கோபத்தில்தான் அவர் தவெகவில் சேர முடிவெடுத்ததாக செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா, புஸி ஆனந்த் ஆகியோரிடம் செங்கோட்டையன் தொடர்ந்து பேசி வருவதாகவும் நவம்பர் 27ம் தேதி எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்து விட்டு அவர் தவெகவில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.