திருடர்களில் பல வகை இருப்பார்கள். அதில் ஒரு வகை திருடர்கள் கொஞ்சம் மனசாட்சியோடு இருப்பார்கள். ஒரு வீட்டில் பணத்தையோ, பொருளையோ திருடி சென்று விட்டு பல வருடங்கள் கழித்து அந்த வீட்டில் வசித்தவருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்ட திருடர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். ஒரு கடையில் திருடிவிட்டு பல வருடங்கள் கழித்து அந்த பணத்தை அனுப்பி வைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. குறிப்பாக, இதுபோன்ற பல சம்பவம் வெளிநாடுகளில் நடந்திருக்கிறது.
தமிழகத்திலும் திருடர்கள் விஷயத்தில் பல சுவாரசியமான சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். திருட வந்த வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டுவிட்டு நன்றாக படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். போலீசார் கமுக்கமாக போய் அவர்களை அமுக்கிய சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. இந்நிலையில்தான் திருநெல்வேலி பழைய பேட்டையில் ஒரு திருடன் செய்துவிட்டு போன சம்பவம் பலருக்கும் சிரிப்பு வரவழைத்திருக்கிறது.
ஒரு திருடன் திருடு போன வீட்டில் பணம் எதுவும் இல்லை.. பெரிதாக விலைமதிப்புள்ள பொருளும் கிடைக்கவில்லை ஆனால் வீட்டில் நிறைய சிசிடிவி கேமராக்கள் இருந்திருக்கிறது. இதைப்பார்த்து கடுப்பான அந்த திருடன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் வீட்டில் ஒத்த ரூபா கூட இல்லை.. அடுத்த தடவை என்ன மாதிரி யாராவது திருட வந்தா அவர்களை ஏமாத்தாம காசு வைக்கவும்.. ஒத்த ரூபா கூட இல்லாத வீட்டுக்கு இத்தனை சிசிடிவி கேமரா வேற.. போங்கடா.. என்னை மன்னித்து விடுங்கள்.. இப்படிக்கு திருடன் என அதில் எழுதியிருக்கிறார்.
இந்த செய்தி பல சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபரை பிடிக்க போலீசாரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.