மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் உள்ள குளறுபடிகள் குறித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். ஆளும் திமுக அரசு தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து மோசடியில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை என்றும், சத்துணவு பணியாளர்கள் போன்றவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பல இடங்களில் படிவங்கள் வழங்கப்படவில்லை அல்லது திரும்ப பெறப்படவில்லை என்றும் ராஜூ குற்றம் சாட்டினார்.
பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை. அவர்களிடம் உரிய இணைய வசதியோ, ஸ்மார்ட் போன்களோ இல்லாததால், கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்றும் அவர் சுட்டி காட்டினார்.
கணக்கெடுப்புப் பணி குழப்பத்துடன் நடந்தால், இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் SIR-இன் நோக்கம் நிறைவேறாது. அமைச்சர் மூர்த்தியின் வெற்றி குறித்து பேசிய அவர், போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெற திட்டமிடுவதாகவும், மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.