நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைப் பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடிவிட்டனர். அப்போது அவரின் வாகனம் அந்த இடத்திற்கு வந்தபோது பேருந்துக்கு வழி விட பலரும் பின்னால் நகர்ந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் அதில் சிக்கி மயக்கமடைந்தனர். சிலர் அங்கேயே உயிரையும் இழந்தனர். சிறிது நேரத்தில் 41 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையிலிருந்து செய்திகள் வெளியானது.
விஜய் கரூருக்கு செல்ல இரவு 7 மணி ஆகிவிட்டதால் பல மணி நேரம் வெளியில் காத்திருந்ததாலும், தண்ணீர் இல்லாததாலும் பலரும் மயக்கம் அடைந்ததாக சொல்லப்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் மயக்கம் அடைந்தனர். அதை பார்த்து அவர் தண்ணீர் பாட்டிலையும் தூக்கி எறிந்தார். அதன்பின் மீண்டும் பேசினார்.
அதன்பின் அவர் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளாமல் அவர் சென்னை வந்து விட்டார் என திமுகவினர் பேச தொடங்கினார்கள். இதனால் தவெக ஒரு மாத காலம் முடங்கி கிடந்தது. ஒரு பக்கம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இதை நீதிமன்றமும் ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. எனவே, சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.
சிபிஐ அலுவகத்தில் நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 10 மணி நேரம் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் சரமாரியாக பல கேள்விகளை அவர்கள் எழுப்பினார்கள் அதன் விவரம் பின்வருமாறு.
செப்டம்பர் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விஜய் பேச திட்டமிட்ட நிலையில் நண்பகல் 12 மணிக்கே விஜய் அந்த இடத்தில் பேசுவார் என அறிவித்தது யார்?.. சென்னையில் இருந்து நாமக்கல்.. பிறகு கரூர் என விஜயின் பயணத் திட்டத்தை வடிவமைத்தது யார்?.. நண்பகல் 12:00 மணி என அறிவித்துவிட்டு விஜய் இரவு 7 மணிக்கு வர என்ன காரணம்?.. அதிக கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே விஜய் தாமதமாக வந்தாரா?.. அதிக கூட்டம் இருப்பதால் திட்டமிட்ட இடத்திற்கு முன்பு விஜயை பேசுமாறு தவெக நிர்வாகிகளிடம் போலீஸ் அதிகாரிகள் கூறினார்களா?..
போலீசார் சொல்லியும் பெரும் கூட்டத்திற்கு அவரின் பிரச்சார வாகனத்தை கொண்டு செல்ல உத்தரவிட்டது யார்?.. விஜய் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்த நிலையில் உண்மை நிலவரத்தை விஜயிடம் ஏன் சொல்லவில்லை?.. கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்த போது தண்ணீர் பாட்டில் விஜய் வீசி எறிந்த பிறகும் அவர் தொடர்ந்து பேசியது ஏன்?.. கரூருக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர்?... தொண்டர்களின் வருகை மற்றும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட நிர்வாகிகள் யார் யார்?.. போன்ற பல கேள்விகளை எழுப்பி சிபிஐ அதிகாரிகள் பதிலை வாங்கியிருக்கிறார்கள்.