தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் புகைப்படங்களை வெளியிட்ட விஷால்...
, சனி, 16 செப்டம்பர் 2017 (16:47 IST)
புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் ஆகிய இணையதளங்களின் நிர்வாகிகளின் புகைப்படங்களை தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
தமிழில் எந்த புதிய படங்கள் வெளிவந்தாலும் அதை திருட்டுத்தனமாக, படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் உள்ளிட்ட இணையதளங்கள் வெளியிட்டு வந்தன. இது தமிழ் சினிமா உலகினருக்கு பெரிய தலைவலியாக இருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பின், திருட்டுத்தனமாக தமிழ் படங்களை இணையத்தில் வெளியிடுபவர்களை கண்டுபிடிக்க குழு ஒன்றை அமைத்தார். அதன் விளைவாக வேலூரை சேர்ந்த கௌரிசங்கர்(24) என்ற வாலிபர் சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அவர்தான் தமிழ்கன் இணையத்தின் அட்மின் என செய்திகள் வெளியானது. அதே நேரம், அவர் எங்கள் அட்மின் அல்ல என தமிழ்கன் இணையத்தின் சார்பாக செய்தியும் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக இணையத்தில் பல மீம்ஸ்களும் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் அட்மின் டிக்ஸன் ராஜ் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையத்தின் அட்மின் அர்விந்த் லோகேஸ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும், அவர்களை பற்றி தகவல் கொடுப்போர்க்கு பரிசுத்தொகை அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்காக [email protected] என்கிற இ-மெயிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்