தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.
இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பான பேபி ஜான் படத்தைப் ப்ரமோட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன எனக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் “என்னுடைய ஆறாவது கதையை கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன். அதற்கு மிகப்பெரிய ஆற்றலும் ஆசீர்வாதங்களும் தேவை. நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வரும் வரைக் காத்திருக்கவும். ஏற்கனவே நீங்கள் சில விஷயங்களை ஊகித்திருப்பீர்கள். அறிவிப்புகள் விரைவில் உங்களை வந்து சேரும்” எனக் கூறியுள்ளார்.