Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

Advertiesment
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

Prasanth Karthick

, வியாழன், 12 டிசம்பர் 2024 (14:14 IST)

"பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்."

 

கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை.

 

கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்படத்தில், சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான ஒரு நடிகர், பிறகு வில்லன், கதாநாயகன், 'சூப்பர் ஸ்டார்', என பரிணாமங்கள் எடுத்து, 2023இல் 'ஜெயிலர்' எனும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஒரு திரைப்படத்தைக் கொடுத்து, இன்றும் 'சோலோ ஹீரோவாக' (Solo hero) நிலைத்து நிற்பதை அவர் கூறியது போலவே 'அற்புதம்' என்றே விவரிக்கலாம்.

 

இன்று அவர் தன் 74வது பிறந்த நாளை (டிச. 12) கொண்டாடி வருகிறார்.

 

தமிழ் சினிமாவை நிச்சயமாக ரஜினிகாந்திற்கு முன்-பின் என பிரிக்கலாம். பல தமிழ் சினிமா நடிகர்களிடம் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பின் தாக்கம் இருப்பதை நம்மால் திரையில் பார்க்க முடிகிறது.

 

தென்னிந்தியா மட்டுமல்லாது, வடஇந்தியாவில் கூட நன்கு அறியப்பட்ட நடிகராகவே ரஜினிகாந்த் இருக்கிறார். திரையில் அறிமுகமாகி 49 ஆண்டுகளைக் கடந்தும் அவர் முன்னணி நடிகராக, 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்பது எப்படி?

 

'முத்து' படத்தில் செய்த வித்தியாசங்கள்
 

நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பதும், தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்த அவரின் புரிதலும் தான் காரணம் என்று கூறுகிறார் நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா.

 

webdunia
Rajnikanth , Muthu, Japan
 

'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' போன்ற திரைப்படங்களில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள இவர், பல திரைப்படங்களின் கதை விவாதங்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

 

"ரஜினி, பெரும்பாலும் கதை விவாதங்களில் கலந்துகொள்வார். முன்னர் எல்லாம் பிறமொழி திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது, அதை அப்படியே எடுத்து வைப்பார்கள். ஆனால் ரஜினி, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்," என்கிறார் ரமேஷ் கண்ணா.

 

கடந்த 1995ஆம் ஆண்டில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற 'முத்து' திரைப்படம், மோகன்லால் நடிப்பில் வெளியான 'தென்மாவின் கொம்பத்' (1994) எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல். இரு திரைப்படங்களின் திரைக்கதையிலும் அதிகளவு வித்தியாசங்களை நம்மால் காண முடியும்.

 

"படையப்பா திரைப்படத்தின் கதை விவாதத்தின் போது, ஒரு காட்சி பிடிக்கவில்லை என சொன்னபோது, அதை அவர் ஏற்றுக்கொண்டார். அது சில 'பஞ்ச் டயலாக்குகள்' கொண்ட மாஸான ஒரு காட்சி. அதில் மாற்றம் சொன்னபோது, எந்த 'ஈகோவும்' இல்லாமல் ஒப்புக்கொண்டார்." என்கிறார் ரமேஷ் கண்ணா.

 

கதை, திரைக்கதை முடிவாகி, படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே கேட்டு நடிப்பதும், அதை இன்றுவரை பின்பற்றுவதும் தான் அவரது வெற்றிக்குக் காரணம் என தான் நினைப்பதாக கூறுகிறார் ரமேஷ் கண்ணா.

 

ரஜினிகாந்தின் திரை பிம்பம்

 

நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என இரண்டாக பிரித்துப் பார்த்தால், அவரது வெற்றிக்கான பாதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என புரியும் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

"அண்ணாமலை திரைப்படத்தில், ஒரு சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அப்பாவி மனிதன், பணக்காரர்களால் ஏமாற்றப்படுகிறான். பிறகு அந்த அப்பாவி, யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேறி, வெற்றி அடைகிறான்."

 

webdunia
 

"அண்ணாமலை திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற பிறகு, ரஜினி தேர்ந்தெடுத்த கதைகள் பெரும்பாலும் 'ஒரு வெகுளியான அல்லது நல்ல மனம் கொண்ட ஒருவன், வாழ்க்கையில் துரோகத்தைச் சந்தித்த பிறகும் கூட, எப்படி பல சாதனைகளைச் செய்கிறான் அல்லது அதிலிருந்து மீண்டு வருகிறான்' என்பதை அடிப்படையாகக் கொண்டவையே" என்கிறார் ஜா.தீபா.

 

ஜா.தீபா குறிப்பிடுவது போன்ற கதாபாத்திர வடிவமைப்புகள் அல்லது கதைகளை, அண்ணாமலைக்கு பிறகு வந்த உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி, கோச்சடையான், லிங்கா போன்ற திரைப்படங்களில் நம்மால் காண முடியும்.

 

அதேபோல, 'தென்மாவின் கொம்பத்' திரைப்படத்தில், 'முத்து' படத்தில் வருவது போன்ற 'ஜமீன்தார்' (ரஜினிகாந்த்) கதாபாத்திரமோ, அவர் தனது உறவினரால் (ரகுவரன் ஏற்று நடித்திருந்த 'ராஜசேகர்' எனும் கதாபாத்திரம்) ஏமாற்றப்படுவது போன்றோ காட்சிகள் இருக்காது.

 

"மற்ற கதாநாயகர்களை விட இதுபோன்ற கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தது ரஜினி தான். ஒரு சாமானியன் நினைத்தால் எந்த எல்லைக்கும் செல்ல முடியும், இது மக்களுக்குப் பிடித்த 'ஒன்லைன்'. அதையே தனது பாணியில் திரையில் காட்டியது, ரஜினியின் புத்திசாலித்தனம் தான்" என்கிறார் தீபா.

 

நடிகர் ரஜினி, 'அண்ணாமலைக்கு' பிறகு, தனது திரைப்படங்களின் கதை குறித்து மிகவும் கவனமாக இருந்தார் என்று கூறும் தீபா, "அவர் தீர்மானித்த கதைகளில் சறுக்கியது என்று பார்த்தால் 'பாபா' மட்டும் தான். இயக்குநர்களும் அவருக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதினர். 'கபாலி' படத்திற்கு பிறகு தான் இந்தப் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது" என்கிறார்.

 

ரஜினி படங்களில் பெண் கதாபாத்திரங்கள்

 

எழுத்தாளரும், பெண்ணிய ஆய்வாளருமான பா. ஜீவ சுந்தரி, "அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ரஜினி தான் வெளிப்படுவார். அதை வெறும் ஸ்டைல் என்று கூறி விட முடியாது. அவர் ஒரு நல்ல நடிகர். எனவே, ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம்" என்கிறார்.

 

பா. ஜீவ சுந்தரி தமிழ் சினிமா குறித்து 'ரசிகை பார்வை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

'முள்ளும் மலரும்' திரைப்படத்தை உதாரணமாகக் கூறும் பா. ஜீவ சுந்தரி, "அந்தப் படம் ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. நாவலை படித்தால், நிச்சயம் 'காளி' கதாபாத்திரத்தை வெறுப்பீர்கள். அவன் பெண்களை மதிக்க மாட்டான், எல்லோரிடமும் கோபப்படுவான், எப்போதும் 'குடி' என்று இருப்பான். ஆனால், அதே 'காளியை' திரையில் ரஜினி நடிப்பில் பார்த்தால், வெறுக்க முடியாது. அதுதான் அவரது பலம்" என்கிறார்.

 

webdunia
 

ஆனால், ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் தனக்குக் கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி.

 

"ஆண்களின் பார்வையில் இருந்து தான் தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ரஜினியின் பல திரைப்படங்களில், படித்த அல்லது பணக்கார பெண்கள் திமிரானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். அவர் அந்தப் பெண்களை திருத்துவது போல காட்சிகள் இருக்கும்." என்று ஜீவ சுந்தரி கூறுகிறார்.

 

இதை எழுத்தாளர் ஜா.தீபாவும் சுட்டிக்காட்டுகிறார். "அது 90களுக்கு முன்புவரை படித்த பெண்கள் குறித்து சமூகத்தில் இருந்த பிம்பம், அதைத்தான் அவரது திரைப்படங்கள் பிரதிபலித்தன. அப்போது பிற நடிகர்களின் படங்களிலும் இது இருந்தது."

 

"ஆனால், இப்போது அதே ரஜினியின் 'கபாலி', 'காலா' திரைப்படங்களில் வந்த பெண் கதாபாத்திரங்களை பார்த்தால், அவர் காலத்திற்கு ஏற்றாற்போல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது புரிகிறது. அதுவும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் தீபா.

 

மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுவது எங்கே?
 

பிபிசி தமிழிடம் பேசிய பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி, "நடிகர் ரஜினிகாந்திற்கு இருப்பது போல பலதரப்பட்ட ரசிகர்களை வேறு நடிகருக்கு பார்ப்பது சிரமம் தான். 'தலைமுறை இடைவெளி' என்று சொல்வோம், ஒரு தலைமுறைக்கு பிடித்தது மற்றொரு தலைமுறைக்கு பிடிக்காது. ஆனால், ரஜினி விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது" என்கிறார்.

 

இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். குறிப்பாக 80கள் மற்றும் 90களில், பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாது முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

 

அதில் குறிப்பிடத்தக்கது 'ஹம்' (Hum) எனும் திரைப்படம். 1991இல் வெளியான இத்திரைப்படத்தில் கதாநாயகன் அமிதாப் பச்சன். அவரது சகோதரராக 'குமார் மல்ஹோத்ரா' எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

இவ்வாறு பிறமொழி திரைப்படங்களில் நடித்ததும், எந்த மாதிரியான திரைப்படங்களை, கதாபாத்திரங்களை மக்கள் விரும்புவார்கள் என்பதை புரிந்துகொள்ள அவருக்கு உதவியது என்கிறார் மதன் கார்க்கி.

 

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ள மதன் கார்க்கி, 2.0 திரைப்படத்தில் எழுதிய ஒரு வசனம், 'I'm the only one, Super One. No Comparison'. அதை நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தைக் குறிக்கவே எழுதியதாக மதன் கார்க்கி கூறுகிறார்.

 

"தனது ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறனை மட்டும் நம்பாமல், தனது பலதரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த நல்ல கதை மற்றும் திரைக்கதை அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்த இடத்தில் தான் மற்ற 'மாஸ் ஹீரோக்களிடம்' இருந்து ரஜினிகாந்த் வேறுபடுகிறார். அதனால் தான் நிலைத்தும் நிற்கிறார்" என்கிறார் மதன் கார்க்கி.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆங்கிலேயர்கள் கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர்: கவர்னர் ரவி